sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : ஜன 18, 2024 12:17 PM

Google News

ADDED : ஜன 18, 2024 12:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாரில் கண்காணிப்பு

கேமரா பொருத்தம்

அம்மாபேட்டை அருகே உள்ள சித்தாரில், ஊர் பொதுமக்கள் சார்பில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கியமான பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்கள், விபத்துக்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அம்மாபேட்டை அடுத்த சித்தார் பஸ் ஸ்டாப்பில், ஊர் பொதுமக்கள் சார்பில் கேமரா பொருத்தப்பட்டது. பவானி டி.எஸ்.பி., அமிர்தவர்ஷினி கேமராவை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளூர் பிரமுகர்கள் குருவன், நல்லசாமி, ராஜா, மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கேமரா ஏற்படுத்தி கொடுத்த மக்களுக்கு போலீசார் நன்றி தெரிவித்தனர்.

பா.ம.க., கொடியேற்று விழா

காணும் பொங்கலை முன்னிட்டு, பா.ம.க., சார்பில், அந்தியூர் ரவுண்டானா பத்ரகாளியம்மன் கோவில் அருகே, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கட்சி கொடி ஏற்றப்பட்டது. பின், மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நகர செயலாளர் மாதேஸ்வரன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாரியூர் அம்மனுக்கு

மஞ்சள் நீர் உற்சவம்

கோபி புதுப்பாளையம் பஜனை கோவிலில், பாரியூர் கொண்டத்து காளியம்மனுக்கு, மஞ்சள் நீர் உற்சவம் கோலாகலமாக நேற்று நடந்தது.

கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த, 11ல், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மலர் பல்லக்கில் ஊர்வலமாக வந்த அம்மனுக்கு, கோபியில் கடந்த, 14ல், தெப்போற்சவம் நடந்தது. இதையடுத்து கடந்த இரு நாட்களாக, கோபியில் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. அதையடுத்து, புதுப்பாளையம் பஜனை கோவிலுக்கு, விநாயகர் மற்றும் சூலவேலுடன் விஜயம் செய்த பாரியூர் அம்மனுக்கு, மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மல்லிகை கிலோ

ரூ. 2,410க்கு ஏலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை கிலோ, 2,410 ரூபாய்க்கு ஏலம் போனது.

முல்லை, 1,145, காக்கடா, 1,000, ஜாதி முல்லை, 750, செண்டுமல்லி, 68, கோழிகொண்டை, 120, சம்பங்கி, 50, அரளி, 140, துளசி, 40, செவ்வந்தி, 150 ரூபாய்க்கு விற்பனையானது.

இன்ஸ்பெக்டர்

பொறுப்பேற்பு

-சத்தியமங்கலம் உட்கோட்டத்துக்குட்பட்ட பங்களாப்புதுார் இன்ஸ்பெக்டராக ரவி என்பவர் நேற்று பதவியேற்று கொண்டார்.

இவர் திருப்பூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவிலிருந்து பங்களாபுதுாருக்கு மாறுதல் செய்யப்பட்டார். ஏற்கனவே பங்களாப்புதுாரில் பணியாற்றி வந்த வடிவேல் குமார் கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் இன்ஸ்பெக்டராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

ஆற்றில் மூழ்கி மாயமான பெயின்டர் சடலமாக மீட்பு

புன்செய்புளியம்பட்டி, ஜன. 18-

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்த பெயின்டர் சார்லஸ் பால்ராஜ், 22. நேற்று முன்தினம் மாட்டுப்பொங்கல் விடுமுறை தினத்தன்று, நண்பர்கள் ஐந்து பேருடன் பவானிசாகர் பூங்கா சென்று விட்டு, அக்கரை தத்தப்பள்ளி கிராமம் அணைக்கரை என்ற இடத்தில் பவானி ஆற்றில் குளித்துள்ளனர்.

அப்போது சார்லஸ் பால்ராஜ், ஆற்றின் நடுவே உள்ள பாறை மீது ஏறி செல்பி எடுக்க முயற்சித்தபோது, வழுக்கி விழுந்து ஆழமான பகுதியில் உள்ள தண்ணீரில் மூழ்கி மாயமானார். பவானிசாகர் போலீசார், சத்தியமங்கலம் தீயணைப்பு துறை வீரர்கள் நீரில் மூழ்கி மாயமானவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் தேடுதல் பணி கைவிடப்பட்டு நேற்று காலை துவங்கியது.

இந்நிலையில் காலை, 11:00 மணியளவில் சார்லஸ் பால்ராஜ் சடலத்தை கண்டெடுத்தனர். 300 மீட்டர் துாரத்துக்கு தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சடலத்தை மீட்ட, பவானிசாகர் போலீசார், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பர்களுடன் குளிக்க சென்ற பெயின்டர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் மீன் கடைகளில் மக்கள் கூட்டம்

ஈரோட்டில், பொங்கல் விழாவின் இறுதி நாளான நேற்று காணும் பொங்கல் கரிநாளாக கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகை விடுமுறை நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனால் பலர் வெளியூருக்கு கல்வி, வியாபாரம், பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செல்ல வேண்டிய சூழலால், நேற்று பெரும்பாலான ஆடு, கோழி இறைச்சி கடைகள், மீன் கடைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

ஈரோட்டில் பல இடங்களில் கறிக்கடைகள் முன் காத்திருந்து, பொதுமக்கள் கறி வாங்கி சென்றனர்.

நேற்று ஆட்டிறைச்சி கூறு போட்டது ஒரு கிலோ, 520, வெள்ளாடு, 750 முதல் 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பிராய்லர் கோழி, 250, நாட்டு கோழி கலப்பினம், 650, ஒரிஜினல் நாட்டு கோழி, 720 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இதே போல் மீன் மார்க்கெட்டில் நெத்திலி ஒரு கிலோ, 150, பால் சுறா, வஞ்சிரம் தலா, 700, வாவல் மீன், 600, சுறா, 350, இறால், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மார்கழி மாதத்தில் சுணக்கமாக இருந்த கறி, மீன் கடைகள் நேற்று ஒரே நாளில் மீண்டும் சுறுசுறுப்படைந்தது.

* கறி நாளை முன்னிட்டு, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கறிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஆட்டுக்கறி கிலோ, 800, நாட்டு சேவல், 650, கறிக்கோழி, 140, ஜிலேபி மீன், 200, கட்லா மீன், 250, ரோகு மீன், 250 ரூபாய்க்கு விற்பனையானது.

திருவள்ளுவர் தினத்தில் மது

விற்ற 61 பேர் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தில் மது விற்ற, 61 பேர் மீது

வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கடந்த, 16ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அந்த நாளில், கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவது குறித்து சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் சட்டம் ஒழுங்கு போலீசார், 36 வழக்கு, மதுவிலக்கு போலீசார், 25 வழக்கு பதிவு செய்தனர். மொத்தம், 429 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அடையாளம்

தெரியாத பெண் சாவு

ஈரோடு ரங்கம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் கடந்த, 13ல் உடல்நிலை சரியின்றி இருந்த, 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். சற்று மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அவர் பெயர் தெரியவில்லை. தகவல் தெரிந்தால் 9498101229 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என, ஈரோடு தாலுகா போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

இரவில் அதிக கட்டணம் வசூல்; மினி பஸ் பறிமுதல்

ஈரோட்டில், நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலித்த மினி பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, ரயில்வே ஸ்டேஷனுக்கு இரவில் தனியார் மினி பஸ் இயக்கப்பட்டது. இதில் பயணிகளிடம் இருந்து, கூடுதல் ரூபாய் வசூலித்தது தொடர்பாக நேற்று முன்தினம் சமூக வலை தளங்களில் புகார் எழுந்தது. இதுகுறித்து ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, பறக்கும் படை ஆர்.டி.ஓ., சரவணன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் மினி பஸ்சை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

அப்போது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மினி பஸ்சை பறிமுதல் செய்தனர்.

தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்

தி சென்னை சில்க்ஸ் குழுமத்தில் அறிமுகம்

தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் புதிய அங்கமாக, நகை துறையில் புது பிராண்டாக, தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட் ைஸ, தி சென்னை சில்க்ஸ் குழும நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், இணை இயக்குனர்கள் பிரசன்ன அங்குராஜ், கண்ணபிரான் அறிமுகப்படுத்தினர்.

இதுகுறித்து இயக்குனர்கள் கூறியதாவது: சுபிட்ச அடையாளமாக நந்தி உருவ அமைப்பால், தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிராண்டின் முதல் கிளையை, பெரம்பலுாரில் விரைவில் தொடங்க உள்ளோம். தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்-ல் தங்க நகைகள் அனைத்தும், 100 சதவீதம் ஹெச்.யு.ஐ.டி., ஹால்மார்க் தரம், வைர நகைகள் ஐ.ஜி.ஐ., தரச்சான்றிதழுடனும், ஹால்மார்க் தரத்துடன் வெள்ளி பொருட்கள், வெள்ளி ஆபரணங்கள், பரிசு பொருட்கள் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும் பொங்கலை முன்னிட்டு, கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை என்பதால், நேற்று முன்தினம், 9,400 சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தனர். இதேபோல், காணும் பொங்கலான நேற்று காலை முதல், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க குவிந்தனர். அங்கு குளித்தவர்கள், சுடச்சுட விற்பனையான, மீன்களை வாங்கி ருசித்து சென்றனர். அதேபோல், சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் என அனைவரும், சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி, பொழுதை கழித்து சென்றனர்.

ரயில்வே ஸ்டேஷனில்

வெடிகுண்டு போலீசார் சோதனை

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு போலீசார், பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.

அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும், 22ல் நடக்கிறது. இதன் எதிரொலியாக அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என மத்திய உளவு துறை, அனைத்து மாநில அரசுக்கும் முன்னெச்சரிக்கையாக தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஈரோடு பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன்களில் வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பொதுமக்களை சோதனை செய்கின்றனர். சந்தேகத்துக்கு உரிய நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். வெளியூர் நபர்களிடமும் விசாரணை நடத்துகின்றனர்.

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், நேற்று வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு போலீசார் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில் மட்டுமின்றி, ரயில் பெட்டிகளிலும் பயணிகள் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனை வரும், 23 வரை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

ஈரோட்டில் வள்ளல் எம்.ஜி.ஆர்.,

மருந்து கடை திறப்பு விழா

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி, ஈரோடு காரை வாய்க்கால் அருகே மொய்தீன் வீதியில் வள்ளல் எம்.ஜி.ஆர்., மருந்து கடை நேற்று திறக்கப்பட்டது.

வள்ளலின் வாரிசுகள் நிறுவனர் மற்றும் தலைவர் வேங்கை ராஜேந்திரன்கு தலைமை வகித்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். ஈரோடு மாநகர மாவட்ட காங்., மண்டல தலைவர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஜாபர் சாதிக் பெற்றுக் கொண்டார்.

வள்ளலின் வாரிசுகள் மாவட்ட செயலர் கேபிள் குட்டி, ரவிக்குமார் எச்.எம்.எஸ்., மாவட்ட செயலாளர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வள்ளலின் வாரிசுகள் நிறுவனரும், வள்ளல் எம்.ஜி.ஆர்., மருந்து கடை உரிமையாளருமான வேங்கை ராஜேந்திரன் கூறியதாவது: எம் ஜி ஆர் பிறந்த நாளை யொட்டி திறக்கப்பட்டுள்ள, மருந்து கடையில் லாப நோக்கம் இல்லாமல் அனைத்து மருந்து, மாத்திரைகளும் வாங்கிய விலைக்கே குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். செலவுகளை ஈடுகட்ட சேவை கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும். மேலும் குறைந்த கட்டணத்தில் சர்க்கரை பரிசோதனை பார்க்கப்படும். பொதுமக்கள் பயன் படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us