ADDED : ஜன 22, 2024 11:49 AM
மனைவியை பிரிந்தவர்
ரயில் மோதி பலி
ஈரோடு, வெண்டிபாளையம் காந்தி வீதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம், 50. பாத்திரங்கள் செப்பனிடும் வேலை செய்து வந்தார். மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர். இவர் மனைவி கவிதா. இருவருக்கும் இடையே, 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனியே வசித்தனர். கடந்த, 20 காலை, 6:00 மணிக்கு காவிரி-ஈரோடு இடையே இயற்கை உபாதை கழிக்க கல்யாண சுந்தரம், ரயில் தண்டவாளத்தை அஜாக்கிரதையாக, கவனக்குறைவாக கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து, ஈரோடு நோக்கி வந்த ஏற்காடு விரைவு ரயில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
மகன்களுடன், மனைவி மாயம்
போலீசில் கணவர் புகார்
இரு மகன்களுடன் மனைவி மாயமானதாக, கோபி போலீசில் கணவர் புகாரளித்துள்ளார்.
கோபி அருகே சின்ன மொடச்சூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 39, பழ வியாபாரி. இவருக்கு ஐஸ்வர்யா, 32, என்ற மனைவியும், தஸ்விந்த், 13, அகில், 10, ரிஷாந்த், 6, என மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த, 20ம் தேதி மாலை, 5:30 மணிக்கு ஐஸ்வர்யா தனது மகன்களான அகில், ரிஷாந்த் ஆகிய இருவருடன், மளிகை கடைக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றார். அதன்பீன் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. கோவிந்தராஜ் கொடுத்த புகார்படி, கோபி போலீசார் வழக்குப்
பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெருமாள் கோவிலில்
திருக்குட நன்னீராட்டு விழா
பவானி அடுத்த, ஒலகடம் அருகே எட்டிக்குட்டையில் உள்ள அரங்கநாத பெருமாள் கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரங்கநாத பெருமாள், லட்சுமி, ஆஞ்சநேயர், கருடன், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை, கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் ஓத, கலச தீர்த்தம் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
எஸ்.டி.பி.ஐ., மாவட்ட
செயற்குழு கூட்டம்
எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி பாஷா வரவேற்றார். கூட்டத்தில் கடந்த, 7ம் தேதி நடந்து முடிந்த 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' மாநாடு மீளாய்வு மற்றும் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட அமைப்பு பொதுச்செயலர் ஜமால்தீன், மாவட்ட செயலர் சாகுல் ஹமீது, பொருளாளர் பர்ஹான் அஹமது, ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் சபீர் அஹமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயலர் முனாப் நன்றி கூறினார்.
ஈரோடு உழவர் சந்தைக்கு
விவசாயிகள் வருகை குறைவு
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தி, தாளவாடியில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. நேற்று, 206 விவசாயிகள், 62 ஆயிரத்து, 549 கிலோ காய்கறி, பழங்களை கொண்டு வந்து விற்றனர். 9,238 வாடிக்கையாளர்கள் வந்து சென்றனர். மொத்தம், 20 லட்சத்து, 58 ஆயிரத்து, 12 ரூபாய்க்கு விற்பனையானது. சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 94 விவசாயிகள் வந்தனர். ஏனைய உழவர் சந்தைகளுக்கு தலா, 22 விவசாயிகள் மட்டுமே வந்து சென்றுள்ளனர். கடும் பனி பொழிவால் காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் வருகையும் குறைந்தது.
மல்லிகை கிலோ
ரூ.3,200க்கு ஏலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 3,200 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை, 1,295, காக்கடா, 1,025, ஜாதி முல்லை, 1,000, செண்டுமல்லி, 59, கோழிகொண்டை, 130, சம்பங்கி, 80, அரளி, 180, துளசி, 40, செவ்வந்தி, 150 ரூபாய்க்கு விற்பனையானது.
தந்தை ஈமசடங்கிற்கு வராத மகனை
கண்டுபிடித்து தர தாய் புகார்
ஈரோடு, மாணிக்கம்பாளையம் வக்கீல் தோட்டம் பூசாரி வீதியை சேர்ந்தவர் திருவேங்கடம், 34. டி.சி.எஸ். படித்து விட்டு ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். கடந்தாண்டு ஜூன், 30 காலை, 8:30 மணிக்கு வீட்டை விட்டு வேலைக்கு செல்வதாக கூறி திருவேங்கடம் வெளியே சென்றார். தான் பெங்களூரில் இருப்பதாகவும், விரைவில் வந்து விடுவதாக தன் தாய், தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதன் பின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆனது.
இதனால் திருவேங்கடத்தை அவரது பெற்றோர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், 40 நாட்களுக்கு முன் சாலை விபத்தில் திருவேங்கடத்தின் தந்தை ரங்கநாதன் இறந்தார்.
ஈமசடங்கிற்கு வந்த உறவினர்கள், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க அறிவுரை கூறினர். இதன்படி, திருவேங்கடத்தின் தாய் தனலட்சுமி, தனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.
மாநில எறிபந்து போட்டி
கொங்கு பள்ளி 2ம் இடம்
ஈரோடு நந்தா இன்ஜினியரிங் கல்லுாரியில், நந்தா கோப்பைக்கான மாநில அளவிலான எறிபந்து போட்டி அண்மையில் நடந்தது.
இதில், 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில், பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேனிலைப் பள்ளி மாணவிகள் அணி இரண்டாமிடத்தை பிடித்து, சுழற்கோப்பை, பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையாக, 3,000 ரூபாயை பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஏனைய உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளி தலைவர் யசோதரன், துணைத் தலைவர் குமாரசாமி, தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் சுப்பிர
மணியன், இணைச்செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாகக் குழுவினர், முதல்வர் முத்துசுப்பிர
மணியம் ஆகியோர் பாராட்டினர்.
கோவில் தேர் செட் அமைக்க
பழைய கட்டடம் அகற்றம்
ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்துாரி அரங்கநாதர் கோவில் தேர்களை நிறுத்த செட் அமைப்பதற்காக, பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்துாரி அரங்கநாதர் கோவில்களின் தேர்கள், இதுவரை வளாகத்தில் நிறுத்தப்பட்டு வந்தது. இரு தேர்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தளம் சேதமடைந்தது. இதனால் மழை காலத்தில் சக்கரம் பழுதாகும் வாய்ப்பு உள்ளது.
இதனால் தேர்களை நிறுத்த, இடம் ஒதுக்கி தர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு, கோவில் நிர்வாகம் கோரிக்கை விடுத்து வந்தது. மேலும், கஸ்துாரி அரங்கநாதர் கோவிலுக்கு இடையூறாக இருந்து வந்த பொதுக்கழிப்பிடத்தையும் அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில், கஸ்துாரி அரங்கநாதர் கோவில் எதிரே, மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த பழைய கட்டடம் அகற்றப்பட்டதோடு, பொதுக்கழிப்பிடத்தையும் மாநகராட்சி நிர்வாகம் இடித்தது. அப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம், உபயதாரர்கள் மற்றும் கோவில் சார்பில் புதிய செட் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.
மின் நிறுத்த அறிவிப்பு ரத்து
சூரியம்பாளையம், மேட்டுக்கடை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக, இன்று ( 22ல்) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
நிர்வாக காரணங்களால், மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என, மின் வாரிய செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.
வாழைத்தார், தேங்காய்
ரூ.15.15 லட்சத்துக்கு ஏலம்
கோபியில், வாழைத்தார், தேங்காய் சேர்ந்து, 15.15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 26 ரூபாய், நேந்திரன், 20 ரூபாய்க்கு விற்றது.
பூவன் தார், 400 ரூபாய், தேன்வாழை, 450, செவ்வாழை, 710, பச்சைநாடான், 300, ரொபஸ்டா, 310, மொந்தன், 270, ரஸ்தாளி. 450 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 9,880 வாழைத்தார்கள், 14.27 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில், ஒரு காய் குறைந்தபட்சம் எட்டு ரூபாய், அதிகபட்சம், 18 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 7,980 தேங்காய்களும், 88 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதாக, அதன் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
காங்கேயத்தில் பா.ஜ.,
ஆலோசனை கூட்டம்
காங்கேயத்தில் பா.ஜ., சார்பில், ஈரோடு பாராளுமன்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தலுக்காக, பா.ஜ.,வினர் பணிகளை துவக்கியுள்ளனர். அனைத்து அணிகளும் பூத் கமிட்டி அமைப்பது உட்பட, பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
காங்கேயம் நகர பா.ஜ., பட்டியல் அணி சார்பில், ஈரோடு பாராளுமன்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்
தலைவர் கோபாலகிருஷ்ணன், நகர தலைவர் சிவபிரகாஷ், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சங்கரகோபால், பட்டியல் அணி பொதுசெயலாளர் சந்தனக்குமார், பொருளாளர் மகேந்திரன் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழா
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பெரியகாளியப்பகவுண்டன் வலசில், புதிதாக மாயவ பெருமாளுக்கு கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம். கல்காரம், விமான கோபுரம், முன் மண்டபம், சாலகாரம் போன்ற திருப்பணிகள் நிறைவு பெற்றது. கடந்த, 3ம் தேதி அன்று யாகசாலைக்கு முகூர்த்தக்கால் போடப்பட்டு நான்கு கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று காலை, 8:15 மணி முதல் 9:15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பொறுப்பேற்பு
போத்தனுார் ரயில்வே இன்ஸ்பெக்டராக இருந்த பிரியா சாய்ஸ்ரீ, ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் நேற்று காலை பொறுப்பேற்று கொண்டார். ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், விருத்தாசலம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கேயம் இன மாடுகள்
ரூ.13 லட்சத்துக்கு விற்பனை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை, ஞாயிறுதோறும் நடக்கிறது. திருப்பூர் மட்டுமின்றி, கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, சேலம் மாவட்ட விவசாயிகளும், மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இடைத்தரகர்கள் யாரும் இன்றி மாடுகளை நேரடியாக விலைபேசி வாங்கலாம்.
நேற்றைய சந்தைக்கு மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 63 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள், 20 ஆயிரம் முதல், 70 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. மொத்தம், 36 கால்நடைகள், 13 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக சந்தை பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.