ADDED : ஜன 29, 2024 12:00 PM
மகள் மாயம்: தந்தை புகார்
கொடுமுடி, கொளாநல்லி, கருங்கரட்டை சேர்ந்தவர் சீதாராமன். பலகாரம் செய்யும் மாஸ்டர். இவரின், ௧5 வயது மகள், 10ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 27ல் வழக்கம்போல் மகளை, பள்ளிக்கு அழைத்து சென்று விட்டார். மாலையில் வழக்கம்போல் மகளை அழைக்க சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால், வகுப்பு ஆசிரியையிடம் கேட்டபோது, காலையிலேயே பள்ளிக்கு வரவில்லை என தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர், மலையம்பாளையம் போலீசில் புகாரளித்துள்ளார்.
வரட்டுப்பள்ளம் அணையில்
பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
பர்கூர் வனப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ள, அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, 1,039 ஏக்கர் பாசன நிலங்களுக்காக, வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் திறந்து வைத்தார். பிப்.,௧௧ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். நிகழ்ச்சியில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, சங்கராபாளையம் பஞ்., தலைவர் குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாலிபரிடம்
பணம் பறிப்பு
மொடக்குறிச்சி, ஆவாரங்காட்டு வலசை சேர்ந்தவர் ரவிவர்மன், 31; முத்துகவுண்டன் பாளையத்தில் இருந்து பரிசல் துறை செல்லும் ரிங் ரோட்டில், டூவீலரில் சென்றார். அப்போது ஈரோட்டை சேர்ந்த மொட்டை கார்த்தி, மதுரையை சேர்ந்த கரண் வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே, தகாத வார்த்தை பேசியும், கத்தியை காட்டி மிரட்டியும், 2,௦௦௦ ரூபாயை பறித்து கொண்டு தப்பினர். அவர் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
அந்தியூரில் குப்பைக்கு தீ வைப்பு
பரவும் புகையால் மக்கள் அவதி
அந்தியூர் டவுன் பஞ்சாயத்து, ஒன்றாவது வார்டு கவுன்சிலர், சரஸ்வதி விஸ்வநாதன், ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.
அதில், அந்தியூர் டவுன் பஞ்சாயத்தில், ஒன்றாவது வார்டில் சுடுகாடு உள்ளது. அந்த சுடுகாட்டில், அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து குப்பைக்கழிவுகளை கொண்டு வந்து தூய்மை பணியாளர்கள் கொட்டுகின்றனர். குப்பைக்கு தூய்மை பணியாளர்கள் தீ வைத்து விடுவதால் புகை வெளியேறுகிறது. அந்தப்பகுதியில், தனியார் மருத்துவமனை, அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள், புகையால் மூச்சுதிணறல் ஏற்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சுவாச கோளாறு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் குப்பை கொண்டு வந்து கொட்டி அதற்கு தீ வைக்க வேண்டாம் என பல முறை பஞ்சாயத்து அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அ.தி.மு.க., கவுன்சிலர் வார்டு என்பதால், என் வார்டை புறக்கணிக்கின்றனர்.
இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
பெண் மில் அதிபர் உள்பட
இருவர் விபரீத முடிவு
சித்தோடு அருகேயுள்ள நடுப்பாளையம் கோபால்சாமி வீதியை சேர்ந்தவர் கோமதி, 47; ஸ்பின்னிங் மில் அதிபர். கோமதிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படும். நேற்று வலி அதிகமாகவே, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். குடும்பத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் இறந்தார்.
* சித்தோடு அருகேயுள்ள மாமரத்துப்பாளையம், லட்சுமிநகர், முதல் வீதியை சேர்ந்தவர் மோகனாம்பாள், 50; கூலி தொழிலாளி. ஆறு மாதங்களாக மன அழுத்த பாதிப்பால் அவதிப்பட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டு ஜன்னல் கம்பியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரு சம்பவங்கள் குறித்தும், சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
வரத்து அதிகரிப்பால்
காய்கறி விலை வீழ்ச்சி
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் தாளவாடி, திருப்பூர், பொள்ளாச்சி ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பெங்களூரு, ஆந்திராவில் இருந்து காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட கூடுதலாக, 900 டன் காய்கறி வரத்தானது. இதனால் கடந்த வாரத்தை விட விலை கிலோவுக்கு, 20 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை குறைந்தது. கடந்த வாரம், 80 ரூபாய்-க்கு விற்ற கத்திரி, 60 ரூபாய்; 60 ரூபாய்க்கு விற்ற வெண்டை, 40; 70 ரூபாய்க்கு விற்ற பாகற்காய், 60; 80 ரூபாய்க்கு விற்ற பீர்க்கன், 60 ரூபாய்க்கும் விற்றது.
கருப்பு அவரை கிலோவுக்கு, 20 ரூபாய் குறைந்து, 80 ரூபாய்க்கு விற்றது. 80 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ், 60; 70 ரூபாய்க்கு விற்ற கேரட், 60 ரூபாய்க்கும் விற்றது. அதேசமயம் ஈரோடு சின்ன வெங்காயம், 75 ஆயிரம் கிலோ வரத்தானது. அதன் விலையும் சரிந்தது. மார்க்கெட்டில் நேற்று பிற காய்கறிகளின் விலை விபரம் (கிலோவில்): இஞ்சி--130, முள்ளங்கி- 30, காலி பிளவர்--40, தக்காளி-25-, சின்ன வெங்காயம்-20, பெரிய வெங்காயம்-25, உருளை-40, பூசணிக்காய்-30.
அந்தியூரில் வாழைத்தார்
ரூ.4.61 லட்சத்துக்கு ஏலம்
அந்தியூர், புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில், வாழை விற்பனை நடந்தது. கதளி ரகம் கிலோ, 30 ரூபாய், நேந்திரம், 18 ரூபாய், பூவன தார், 550 ரூபாய், செவ்வாழை தார், 750 ரூபாய், ரஸ்தாளி தார், 480 ரூபாய், மொந்தன் தார், 320 ரூபாய்க்கும் விலை போனது. மொத்தம், 2,௦௦௦ வாழைத்தார் வரத்தாகி, 4.61 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
மாநகராட்சி 52வது வார்டில்உடைந்த சின்டெக்ஸ் தொட்டி
ஈரோடு மாநகராட்சி, 52வது வார்டு பொய்யேரிக்கரையில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக, 15 ஆண்டுகளுக்கு முன் சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது சேதமாகி ஆங்காங்கே உடைந்துள்ளதால், குடிநீர் வீணாகிறது. இதனால் புதிய சின்டெக்ஸ் தொட்டி வைக்க அப்பகுதி மக்கள், நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து
வருகின்றனர்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மாநகராட்சி நிர்வாகமும், வார்டு தி.மு.க., கவுன்சிலர் சாந்தியும், அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக, மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
பஸ் ஸ்டாண்டில் குவிந்தது கூட்டம்
வள்ளலார் தினம், குடியரசு தினம், சனி மற்றும் ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை, நேற்றுடன் முடிந்தது.
இதனால் சொந்த ஊருக்க வந்த அரசு, தனியார் நிறுவன தொழிலாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர், நேற்று மீண்டும் நிறுவனத்துக்கும், கல்லுாரிக்கும் புறப்பட்டனர். இதனால் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் மாலை முதலே கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் நெரிசலை தவிர்க்க அரசு தரப்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. ஈரோட்டில் இருந்து கோவை மார்க்கமாக செல்லும் பஸ்கள், ஓரிரு நிமிடங்களில் நிரம்பியது.
காங்கேயம் இன மாடுகள்
ரூ.14 லட்சத்துக்கு விற்பனை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது.
மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 61 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல் 61 ஆயிரம் ரூபாய் வரை விற்றன.
கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 40 கால்நடைகள், 14 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, சந்தை பொறுப்பாளர் தெரிவித்தார்.
கும்பாபிஷேக 5ம் ஆண்டு விழா
ஈரோடு, நக்கீரர் வீதியில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர், பாலமுருகர், புது எல்லை மாரியம்மன் கோவிலின் ஐந்தாமாண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வரத்து குறைவால்
மீன் விலை உயர்வு
ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக வரத்து குறைந்து வருகிறது.
இதனால் நேற்று விலை எகிறியது. அயிலை மீன் கிலோ-250 ரூபாய், மத்தி-200, வஞ்சிரம்--800, விலாங்கு மீன்-400, பாறை-500, இறால்-450, ஊளி-400, வாவல்-800, சால்மன்- 700, சங்கரா-350, நண்டு-350 ரூபாய்க்கு விற்றது. அணை மீன்களான பாறை கிலோ, 160 ரூபாய், லோகு, கட்லா, 180 ரூபாய்-க்கும் விலை போனது.
கடல் மீன்கள் வரத்து குறைந்ததால், கிலோவுக்கு, ௧௦௦ ரூபாய் முதல், ௨௦௦ ரூபாய் வரை விலை கூடியதாக, மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.
பிளாஸ்டிக் கழிவு அதிகரிப்பு; கால்நடைகளுக்கு ஆபத்து
புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் சிறிய பெட்டிக்கடை முதல் மளிகை கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில், பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரித்துள்ளது. விற்பனையாளர்களுக்கும் நுகர்வோருக்கும் அவை எளிதாக இருந்தாலும், நிலத்தடி நீர் சேமிப்பு, இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்தாக உள்ளது.
கடந்த ஆட்சியில் பிளாஸ்டிக் பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை அரசு செயல்படுத்தியது. ஆனாலும், பயன்பாடு குறைந்ததாகத் தெரியவில்லை. புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் தினமும், பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும், 2 டன் வரை வெளியேற்றப்படுகின்றன. இவை அனைத்தும் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுவதில்லை. குப்பைத் தொட்டி, வாரச்சந்தை வளாகத்தில் குவிக்கப்படுகின்றன.இந்த பிளாஸ்டிக் கழிவுகள் சில இடங்களில், விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்படுகின்றன. பல இடங்களில் பசு, எருமை மாடுகள், குப்பையில் உள்ள உணவுக் கழிவுகளுடன், பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து உண்டு விடுகின்றன. அதனால் தொண்டை, வயிற்றில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்கின்றன. கால்நடை, இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க புன்செய்புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.