sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : பிப் 19, 2024 10:52 AM

Google News

ADDED : பிப் 19, 2024 10:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செந்துார் முருகன் கோவிலில்

வரும் 22ல் கும்பாபிஷேகம்

கொடுமுடி அருகே சாலைபுதுாரில் உள்ள, செந்துார் முருகன் கோவிலில் வரும், ௨௨ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி இன்றிரவு கிராம சாந்தி நடக்கிறது. நாளை அதிகாலை விநாயகர் வேள்வி, மாலையில் காப்பு அணிதல், யாக சாலைக்கு கலச புறப்பாடு நடக்கிறது. 21ம் தேதி இரண்டாம் கால வேள்வி, விமான கலசம் நிறுவுதல், தெய்வ திருமேனிகளுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. 22ம் தேதி அதிகாலை திருப்பள்ளி எழுச்சி, மூல மூர்த்திகளுக்கு காப்பு அணிவித்தல், நான்காம் கால வேள்வி நடக்கிறது. காலை, 8:௦௦ மணிக்கு செந்துார் முருகன், விநாயகர், ஐயப்ப சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

12 இடங்களில்

குடிநீர் டேங்க் திறப்பு

கோபி சட்டசபை தொகுதியில், 24 லட்சம் ரூபாய் செலவில், வளர்ச்சி திட்டப்பணிகளை, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், நேற்று துவக்கி வைத்தார். காமராஜ் நகரில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். தவிர செட்டியாம்பாளையம், கவின்நகர், கொளப்பலுார், சாணார்பாளையம் உள்பட, 12 இடங்களில், குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். அவருடன் கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நாட்டு துப்பாக்கியுடன்

கடம்பூரில் ஒருவர் கைது

கடம்பூர் மலை, எக்கத்துாரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு சொந்தமான, 10 ஏக்கர் தோட்டத்தை அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர், குத்தகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக, கிருஷ்ணன் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக, கடம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நடந்த சோதனையில், தோட்டத்தை குத்தகைக்கு ஓட்டி வரும் கணேசை கைது செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தலைமறைவான கிருஷ்ணன், சாந்தகுமார், சந்திரன் என மூவரை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.

அ.தி.மு.க., சார்பில்

தெருமுனை பிரசாரம்

சென்னிமலை ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பாக, பசுவபட்டி, எக்கட்டாம்பாளையம், புதுப்பாளையம், ஓட்டப்பாறை, சென்னிமலை என ஐந்து இடங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. சென்னிமலை ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர செயலாளர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் மைக் ரவி பேசினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகராஜ், சதீஸ், சுமதி தங்கவேல், யூனியன் கவுன்சிலர் சிவசுப்பிரமணியம், ராசு தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மூன்று இடங்களில் தீ விபத்து

போராடி அணைத்த வீரர்கள்

ஈரோடு, முத்தம்பாளையம், கொங்கனபாளி கிராமத்தில், பொது இடத்தில் காய்ந்த புல்வெளியில் நேற்று காலை, 6:00 மணியளவில் அணைக்கப்படாத புகை வஸ்துவால் தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்த நிசாந்த் என்பவரின் தகவலின்படி சென்ற, ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதேபோல் நேற்று முன்தினம் மதியம், முத்தம்பாளையம் பண்ணைகாட்டு வலசில், குணசேகரனுக்கு சொந்தமான வைக்கோல் போர் தீப்பிடித்தது. பல மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. ஈரோடு-நசியலுார் ரோடு, நாச்சியம்மன் டீ கடை அருகே கழிவு பஞ்சில் பிடித்த தீயை, ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், 30 நிமிடம் போராடி

அணைத்தனர்.

மீன் வியாபாரி வீட்டில் தீசத்தியமங்கலம் அருகே கூத்தனுாரை சேர்ந்தவர் முருகேசன், 49, மீன் வியாபாரி. நேற்று அதிகாலை வழக்கம்போல் மனைவி சத்யாவுடன், மீன் வியாபாரத்துக்கு கிளம்பி

விட்டார்.

முன்னதாக காலையில் வீட்டில் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டுள்ளனர். காலை, 6:௦௦ மணியளவில் வீட்டின் ஓடுகள் வெடித்து சிதறின. அப்போது வீட்டின் வெளி அறையில் துாங்கி கொண்டிருந்த அவரின் மகள் கற்பகம் சத்தமிடவே, அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த பொருட்கள் கருகி விட்டன. இதுகுறித்து சத்தி போலீசார், தீயணைப்பு துறையினர் விசாரிக்கின்றனர்.

சென்னிமலை முருகனை தரிசிக்க

சிங்கப்பூர் அமைச்சர் நாளை வருகை

சிங்கப்பூர் நாட்டின் உள்துறை அமைச்சரான சண்முகம், சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமியை தரிசிக்க நாளை வருகிறார். சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் அவர், சென்னிமலைக்கு தனியார் ஹெலிகாப்டரில் வருகிறார்.

ஹெலிகாப்டர் இறங்குவதற்காக, சென்னிமலையில் அரசு உதவி பெறும் கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்பு பணிக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

ஐகோர்ட் முன்னாள்

நீதிபதி மறைவு

ஈரோடு, பெரியார் நகரை சேர்ந்தவர் எஸ்.எம்.சித்திக், 88; சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி. வயது மூப்பால் அவரது வீட்டில் நேற்று காலமானார். உடலுக்கு வக்கீல்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த சித்திக், 1966ல் ஈரோடு கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். அதன்பிறகு கள்ளக்குறிச்சி, ராயவேலுார், சங்ககிரி கோர்ட்டுகளில் முன்சீப்பாக பதவி வகித்தார். உடுமலை கோர்ட்டில் சார்பு நீதிபதியாக இருந்தவர், 1979ல் கோவை மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

சேலம், திருச்சி, சென்னை மாவட்டங்களில் பணியாற்றி, 1991- முதல் 1996 வரை சென்னை தடா சிறப்பு கோர்ட் நீதிபதியாக பதவி வகித்தார். அப்போது முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க காரணமாக இருந்தவர். கடந்த, 1996ல் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் பதவி வகித்தார்.

அரசு பஸ் மோதி

தொழிலாளி சாவு

பவானிசாகர், கோடேபாளையத்தை சேர்ந்தவர் செந்தில், 34; நேற்று முன்தினம் இரவு எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள தனது அம்மாவை பார்த்து விட்டு, சி.டி.100 பைக்கில் கோடேபாளையத்துக்கு புறப்பட்டார். நெகமம் பிரிவு அருகில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில், செந்தில் துாக்கி வீசப்பட்டார். அப்பகுதியினர் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நள்ளிரவில் இறந்தார். விபத்தில் பலியான செந்திலுக்கு, அபிராமி என்ற மனைவி, மூன்று மாத பெண் குழந்தை உள்ளது. இதுகுறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

பஸ்சில் மூதாட்டியிடம்

தாலிக்கொடி பறிப்பு

கோபி அருகே வாணிப்புத்துாரை சேர்ந்தவர் பழனியம்மாள், 62; கடந்த, 13ம் தேதி கோபியில் இருந்து செங்கப்பள்ளி வரை செல்லும், அரசு டவுன் பஸ்சில் பயணித்தார். அப்போது அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தாலிக்கொடி களவுபோனது. பஸ்சில் தன்னருகே அமர்ந்து பயணித்த, மூன்று பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாக, கோபி போலீசில் பழனியம்மாள் புகாரளித்துளார். இதன்படி கோபி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2,௦௦௦ டன் நெல் வருகை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து, 2,௦௦௦ டன் நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, ஈரோடு கூட்ஸ் ஷெட்டுக்கு நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.

விரைவில் அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக்கி, பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா

ஈரோடு, வீரப்பன்சத்திரம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் தலைமை

வகித்தார்.

மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், வட்டார கல்வி அலுவலர் பாரதி பிரபு முன்னிலை வகித்தார். தலைமையாசிரியைகள் கோமதி, ஜெயந்தி, மாநகராட்சி கவுன்சிலர் வனிதாமணி விழாவை துவக்கி வைத்தனர்.

பள்ளி பராமரிப்புக்கு முன்னாள் மாணவர்கள் தங்கமுத்து, மஞ்சள் அரிமா சங்க ஈஸ்வரன், மாதவன் ஆகியோர் நன்கொடை வழங்கினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, -மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதேபோல்,ஈரோடு மாநகராட்சி ஈ.பி.பி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.

தலைமையாசிரியை தமிழ்செல்வி தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். தேசிய எறிபந்து போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் கவின், ரக்சித் கவுரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. பி.டி.ஏ., துணை தலைவர் வினோத்குமார், ஆசிரியை, ஆசிரியர்கள், இல்லம் தேடி தன்னார்வலர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

சென்னிமலைக்கு தனி குடிநீர் குழாய்

குடிநீர் வழங்கல் அமைச்சர் உத்தரவு

சென்னிமலை பேரூராட்சி பகுதியில், நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பேரூராட்சி வார்டுகளில், 12 நாட்களுக்கு ஓரு முறையே தற்போது குடிநீர் வினியோகம் நடக்கிறது.

இந்நிலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகிக்கும் வகையில், காவிரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்றும் நிலையம் பெருந்துறையில் அமைக்க வேண்டும். அங்கிருந்து சென்னிமலை பேரூராட்சிக்கு தனியாக குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்று, பெருந்துறை வந்த, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேருவிடம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணைத்தலைவர் சவுந்தர்ராஜன் மனு அளித்தனர்.

இதை தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் அமைச்சர் இதுகுறித்து விபரம் கேட்டறிந்தார். உடனடி தீர்வாக சென்னிமலைக்கு தனி குடிநீர் பைப் லைன் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பொதுத்தேர்வு மையங்களுக்கு

விடைத்தாள் அனுப்பி வைப்பு

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான மாணவ--மாணவிகள் விவரம் பூர்த்தி செய்யும் முகப்பு சீட்டுடன் கொண்ட விடைத்தாள் மாவட்ட அரசு தேர்வுகள் துறை அலுவலகத்தில் இருந்து, அந்தந்த தேர்வு நடக்கும் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து மாவட்ட அரசு தேர்வுகள் துறையினர் கூறியதாவது:

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 1ல் தொடங்கி, 22ம் தேதி வரையிலும், பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச், 4ல் தொடங்கி 25ம் தேதியும் நிறைவடைகிறது. தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு செய்முறை நிறைவடைந்துள்ளது. பிளஸ் 1க்கு இன்று (19ம் தேதி) துவங்கி, 24ம் தேதி வரை நடக்கிறது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவ--மாணவியரின் தேர்வு எண், பாடப்பிரிவு விவரங்களை பூர்த்தி செய்யும் முகப்பு சீட்டு அந்தந்த மாவட்ட தேர்வுகள் துறை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்துக்கும் வந்துள்ளது. முகப்பு சீட்டுடன், விடைத்தாள் மற்றும் இணைப்பு சீட்டு அந்த தேர்வு மையத்திற்கு அனுப்பி, தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

மகாசக்தி மாரியம்மன்

கோவில் கும்பாபிஷேகம்

ஆப்பக்கூடல் அருகே வெள்ளாளபாளையத்தில், மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக பவானி ஆற்றில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள், புனிதநீர் சுமந்து வந்தனர். அந்த நீரை கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஆப்பக்கூடல், புதுப்பாளையம், வெள்ளாளபாளையம், சென்னிமலை கவுண்டன்புதுார் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

பணம் பறித்த வழக்கில்மேலும் இருவர் கைது

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் கலா. இவரை தொழில் ரீதியாக, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த ஜெகதீஸ் வரவழைத்தார். காரில் வந்தபோது காங்கேயம் அருகே கடத்தி சென்று, ஐந்து லட்சம் ரூபாய், எட்டு பவுன் சங்கிலியை பறித்து சென்றார். இந்த வழக்கில் ஏற்கனவே ஜெகதீஸ் உள்ளிட்ட ஐந்து பேரை, காங்கேயம் போலீசார் கைது செய்து, திருப்பூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வழக்கில் தலைமறைவாக இருந்த முத்துார், புதுப்பாளையம் செந்தில், 50; திருப்பூர் செந்தில்குமார், 40, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

பெண்ணுக்கு மிரட்டல்வாலிபருக்கு காப்பு

கோபி அருகே குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர், மனோஜ்குமார், 28; இவர் திவ்யா, 24, என்ற பெண்ணின் வீட்டுக்கு இரு நாட்களுக்கு முன் சென்று, தகாத வார்த்தை பேசி மிரட்ட ல் விடுத்தாராம். திவ்யா புகாரின்படி கோபி போலீசார் மனோஜ்குமாரை நேற்று கைது செய்தனர்.

'தேங்காய், கடலை எண்ணெய் ரேஷன் கடைகளில் வழங்கணும்'

ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்கி வருவதை தடை, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெயை மானிய விலையில் வழங்கக்கோரி, சென்னையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி

வருகின்றனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து, ஊதியூரை அடுத்துள்ள நிழலி பகுதியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தென்னந்தோப்பில் விவசாயிகள் கறுப்பு கொடியேந்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் அருகே ரேக்ளா சீறிப்பாய்ந்த காளைகள்தாராபுரத்தை அடுத்த செம்மேகவுண்டன்பாளையம் நல்ல மங்கை உடனமர் நாகேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ரேக்ளா பந்தயம் நேற்று நடந்தது. இதில் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன.

வண்டிகளில் பூட்டப்பட்ட காளைகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்தன. சாலையின் இருபுறமும் நின்று நுாற்றுக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். வெற்றி பெற்ற முதல் மூன்று ரேக்ளா வண்டி உரிமையாளர்களுக்கு முறையே ஒரு பவுன், முக்கால் பவுன், அரை பவுன் தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.

காங்கேயம் இன மாடுகள் ரூ.14 லட்சத்துக்கு விற்பனை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில், காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. சந்தைக்கு மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 63 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 67 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. இடைத்தரகர் யாருமின்றி விவசாயிகள், வியாபாரிகள் விலைபேசி வாங்கி சென்றனர். மொத்தம், 49 கால்நடைகள், 14 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, சந்தை பொறுப்பாளர் தெரிவித்தார்.

விபத்தில் பங்க் ஊழியர் பலி

அந்தியூர் அருகே கரட்டூர் மேட்டை சேர்ந்தவர் பிரகாஷ், 31; பெட்ரோல் பங்க் ஊழியர். திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. சித்தி கனகஜோதியுடன் நேற்று முன்தினம் இரவு டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில், அந்தியூர்-அத்தாணி சாலையில் சென்றார். எதிரே வந்த மேக்சி கேப் டிராவலர் வாகனம், மொபட் மீது மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே பிரகாஷ் றந்து விட்டார். கனகஜோதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஓய்வு டிரைவர் மாயம்

சித்தோடு அருகேயுள்ள ஆர்.என்.புதுாரை அடுத்த மாயவரத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹீம், 78; ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால், அவ்வப்போது மனநலம் பாதித்து, மனம் போன போக்கில் சென்று விடுவாராம். கடந்த, 15ம் தேதி மாலை நடைபயிற்சி சென்றவர் வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காத நிலையில், அவரது மகள் சபானன், சித்தோடு போலீஸ் ஸ்டேஷனில், நேற்று புகாரளித்தார். இதன் அடிப்படையில், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

அங்கன்வாடி திறப்பு

பெருந்துறை, பிப். 19-

பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி, துடுப்பதி மற்றும் பள்ளபாளையத்தில், 12.86 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள் நேற்று திறக்கப்பட்டன. சேர்மேன் சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்தார். துடுப்பதி ஊராட்சி தலைவர் கவிதா அன்பரசு முன்னிலை வகித்தார். பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார், அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார். பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், துணை செயலாளர் அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவிலில் தாலி திருட்டு

தாராபுரம், பிப். 19-

தாராபுரத்தை அடுத்த கரையூர் அருகே வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பெரும்பாலும் வெளியூர் பக்தர்களே வருகின்றனர். நேற்று காலை பூசாரி வழக்கம்போல் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அவர் புகாரின்படி தாராபுரம் போலீசார் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். உண்டியலை உடைத்து வெள்ளி நகைகளையும், சுவாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை கிராம் தங்க தாலியையும் திருடி சென்றுள்ளனர். களவாணிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலனுாரில் வள்ளிக்கும்மி

தாராபுரம், பிப். 19-

தாராபுரத்தை அடுத்த மூலனுாரில், பவளக்கொடி குழுவினரின் வள்ளி, கும்மி ஆட்ட பயிற்சி, நடந்து வந்தது. பயிற்சி முடிந்து அரங்கேற்றம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதுகுறித்து வள்ளி கும்மி ஆட்ட குழுவினர் கூறுகையில், 'பல்வேறு பகுதிகளிலும், இந்த கலாசார ஆட்டத்தை பரப்பி வரும் நிலையில், 95வது அரங்கேற்ற நிகழ்ச்சியாக மூலனுாரில் நடந்தது' என்றனர்.






      Dinamalar
      Follow us