/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி கான்கிரீட் திட்ட பேச்சுவார்த்தையில் நீதிமன்ற அவமதிப்பில்லை; அமைச்சர்
/
கீழ்பவானி கான்கிரீட் திட்ட பேச்சுவார்த்தையில் நீதிமன்ற அவமதிப்பில்லை; அமைச்சர்
கீழ்பவானி கான்கிரீட் திட்ட பேச்சுவார்த்தையில் நீதிமன்ற அவமதிப்பில்லை; அமைச்சர்
கீழ்பவானி கான்கிரீட் திட்ட பேச்சுவார்த்தையில் நீதிமன்ற அவமதிப்பில்லை; அமைச்சர்
ADDED : ஜன 05, 2024 10:55 AM
ஈரோடு: ''கான்கிரீட் திட்ட எதிர்ப்பு விவசாயிகளுடன், ஈரோடு மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்திய பேச்சுவார்த்தையில் நீதிமன்ற அவமதிப்பில்லை,'' என, அமைச்சர் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
கீழ்பவானி கான்கிரீட் திட்டம் தொடர்பான பணிகளை செயல்படுத்த சில வழிமுறைகளுடன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம், இத்திட்ட எதிர்ப்பு விவசாயிகளை அழைத்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு குழு அமைக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு எதிர்ப்பு விவசாயிகளை அழைத்து பேசியதும், குழு அமைத்ததும் நீதிமன்ற அவமதிப்பு என, திட்ட ஆதரவு தரப்பு விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி ஈரோட்டில் வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
அவ்வாறு அழைத்து பேசியது தவறில்லை. என்ன முடிவெடுக்கிறோம் என்பதை வைத்துத்தான், அது நீதிமன்ற அவமதிப்பா, இல்லையா என தெரியவரும்.
விவசாயிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேரணி, கூட்டம் நடத்துகின்றனர். அமைதியான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காக பேசினோம். அப்போதும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளதை மனதில் வைத்து பேச வலியுறுத்தினோம். அங்கு எந்த முடிவையும் நானோ, கலெக்டரோ கூறவில்லை. சரியாக பணி நடக்க வலியுறுத்தினோம்.
அத்தரப்பு விவசாயிகள் ஊர்வலமாக வருகிறார்கள். அவர்களை அழைத்து பேசாவிட்டால், 'அரசும், அமைச்சரும், மாவட்ட நிர்வாகமும் அழைத்து பேசி இருக்கலாம்' என கூறுவீர்கள்.
நீதிமன்றம் என்ன சொல்லி உள்ளது என்பதைத்தான், அந்த விவசாயிகளிடம் கூறினோம். சில விவசாயிகளுக்கு அந்த உத்தரவு தெரியாமல் இருக்கலாம் என்பதால் விளக்கினோம். அவர்களும் நீதிமன்றத்தை அணுக உரிமை உள்ளது. இருந்தும், சமாதானமாக திட்டப்பணி நடக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அழைத்து பேசுவது தப்பு என்றால், நாங்கள் எதற்காக இருக்கிறோம்.
நீதிமன்றத்துக்கு எதிராக ஏதும் பேசவில்லை. அவமதிப்பா என்பதைக்கூட, நீதிமன்றத்தில் தெரிவிப்போம். ஈரோட்டில் ஊர்வலம் நடந்ததால், அவர்களை மட்டும் அழைத்து பேசினோம். முடிவு எடுப்பதற்காக கூட்டம் நடத்தினால் கரூர், திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.,க்களை அழைத்திருப்போம்.
அவ்வாறு விவசாயிகள் தரப்பில் அமைத்துள்ள குழு, தங்கள் கோரிக்கையை அறிக்கையாக தர கேட்டுள்ளோம். அதை அரசிடம் தெரிவித்து, தேவையானால் நீதிமன்றத்தில் விளக்குவோம்.
அதேநேரம், நீதிமன்றம் தெரிவித்துள்ளதை எவ்வாறு அமல்படுத்துவோம் என்பதை தேவையான நேரம் தெரிவிப்போம். அதுபோல, கான்கிரீட் திட்டம் வேண்டும்; வேண்டாம் என ஆதரவு, எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளே சில ஒப்பந்தங்களை போட்டுள்ளனர். அதுகூட நீதிமன்ற அவமதிப்புதான். இதுபற்றி நான் பேச விரும்பவில்லை.
கடந்த காலங்களில், 55 கி.மீ., துாரத்துக்கு திட்டப்பணி செய்வதாக கூறினோம். தற்போதைய நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதல்படி பணிகள் நடக்கும். வேறு எங்காவது மாற்றம் தேவை எனில் நீதிமன்றத்தை அணுகாமல், செயல்படுத்த மாட்டோம்.
ஒவ்வொரு முறையும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற இடங்களில் பணி செய்யும்போது, பல பிரச்னைகளை சமாளிக்கிறோம். அதிகாரிகள், போலீஸ், ஒப்பந்ததாரர்கள் பாதிக்கின்றனர். அதுபோன்ற நிலையை தடுக்கும் முயற்சியே பேச்சுவார்த்தை.
தற்போது கீழ்பவானியில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால், இப்போது பணியை செய்தால், சிரமம் இருக்காது என்பதால், முன்னதாகவே பேசுகிறோம். கீழ்பவானியில் விரைவாக, வீணாகாமல் தண்ணீர் செல்வதுதான் எங்கள் நோக்கம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.