/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'கீழ்பவானியில் 6ம் நனைப்புக்கு தண்ணீர் திறப்பில்லை'வேளாண் கூட்டத்தில் செயற்பொறியாளர் தகவல்
/
'கீழ்பவானியில் 6ம் நனைப்புக்கு தண்ணீர் திறப்பில்லை'வேளாண் கூட்டத்தில் செயற்பொறியாளர் தகவல்
'கீழ்பவானியில் 6ம் நனைப்புக்கு தண்ணீர் திறப்பில்லை'வேளாண் கூட்டத்தில் செயற்பொறியாளர் தகவல்
'கீழ்பவானியில் 6ம் நனைப்புக்கு தண்ணீர் திறப்பில்லை'வேளாண் கூட்டத்தில் செயற்பொறியாளர் தகவல்
ADDED : ஏப் 26, 2025 01:19 AM
ஈரோடு: 'கீழ்பவானி வாய்க்காலில் ஆறாம் நனைப்புக்கு தண்ணீர் திறக்கப்படாது' என்று, வேளாண் அதிகாரி தெரிவித்தார். ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி முன்னிலை வகித்தனர்.
கூட்ட விவாதம் வருமாறு:கீழ்பவானி பாசன விவசாயிகள்: கீழ்பவானி வாய்க்காலில், 6 நனைப்புக்கு தண்ணீர் விடுவதற்கு பதில், 5 நனைப்புக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. வெயில் அதிகம் உள்ளதாலும், இன்னும் அறுவடைக்கு நாட்கள் உள்ளதால், 6ம் நனைப்புக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
மேட்டூர் வலசு கரை பாசன சபை செயலர் பழனிசாமி: மேட்டூர் வலது கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தியதும், துார்வார வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி: மானாவாரி இரவை பயிருக்கு புதிய கடலை ரகம் வழங்க வேண்டும். கீழ்பவானியில், 5 நனைப்புக்கு வழங்கிய தண்ணீரே, பயன்படுத்தாமல் வீணாக காவிரியில் கலக்கிறது.
சக்தி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் குப்புசாமி: சக்தி சர்க்கரை ஆலை எரி சாராய கழிவை, டேங்கர்களில் கொண்டு வந்து விவசாய நிலங்கள், நீர் நிலை ஓரங்களில் ஊற்றுவதால் நிலத்தடி நீர், கிணற்று நீர், நீர் நிலைகள் பாதிக்கிறது. டேங்கரில் கொண்டு கொட்டுவதை மாசுகட்டுப்பாட்டு வாரியம் தடுக்க வேண்டும்.
பஞ்., - டவுன் பஞ்., பகுதியில் சேகரமாகும் திடக்கழிவையும், நீர் நிலை, வயல்களிலும், பொது போக்குவரத்து பாதைகளில் கொட்டி செல்வதால், அவற்றை அகற்ற முடியாமல் சிரமமாக உள்ளது.
ஈரோடு நீர் வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி: கீழ்பவானி, 2ம் போகத்துக்கு தண்ணீர் தேவை உள்ளது. முதல் போகத்துக்கு, 5 நனைப்புக்கு மட்டும் தண்ணீர் திறந்தால் போதும் என விவசாய அமைப்புகள் கூறியதால், 6ம் நனைப்புக்கு தண்ணீர் திறக்க அரசாணை பெறவில்லை.
கீழ்பவானி வாய்க்காலில், 18 முதல், 21வது மைல், 30 முதல், 34வது மைல், ஊஞ்சலுார் கால்வாய், சென்னசமுத்திரம் கால்வாயில் தண்ணீர் நிறுத்தத்துக்கு பின், மராமத்துப்பணி நடத்தப்படும்.
பெருந்துறை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா: சக்தி சர்க்கரை ஆலை எரிசாராய கழிவை, விவசாய நிலங்களில் இயற்கை உரமாக பயன்படுத்த வழங்குகின்றனர். அதை டேங்கரில் எடுத்து செல்லக்கூடாது என கூறியுள்ளோம்.
ஆலை மற்றும் கழிவு கொட்டிய இடங்களை ஆய்வு செய்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

