/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊர் திரும்பாத வடமாநில தொழிலாளர்கள்; அரசுப்பணிகளில் சுணக்கம்; தொழிற்சாலைகளில் பாதிப்பு
/
ஊர் திரும்பாத வடமாநில தொழிலாளர்கள்; அரசுப்பணிகளில் சுணக்கம்; தொழிற்சாலைகளில் பாதிப்பு
ஊர் திரும்பாத வடமாநில தொழிலாளர்கள்; அரசுப்பணிகளில் சுணக்கம்; தொழிற்சாலைகளில் பாதிப்பு
ஊர் திரும்பாத வடமாநில தொழிலாளர்கள்; அரசுப்பணிகளில் சுணக்கம்; தொழிற்சாலைகளில் பாதிப்பு
ADDED : நவ 11, 2024 07:24 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் பெரும்பள்ளம் ஓடை விரிவாக்கம், சோலாரில் புது பஸ் ஸ்டாண்ட் பணி, மத்திய பஸ் ஸ்டாண்டில் புதிய வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றனர். தீபாவளி முடிந்து, 10 நாட்களாகியும் ஈரோடு திரும்பவில்லை. இதனால் மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில், வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டு வந்தனர். இதில் பெரும்பாலானோர், கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்ற நிலையில் பலர் திரும்பவில்லை.
தற்போது, தீபாவளியை முன்னிட்டு, சொந்த ஊருக்கு சென்ற வடமாநிலத்தொழிலாளர்களும் இதுவரை வரவில்லை. ஈரோட்டில் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை போலவே, அவர்களது சொந்த மாநிலத்திலும் வழங்க அம்மாநில அரசுகள் முன் வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திலேயே பணிபுரிய முடிவெடுத்துள்ளனர். எனவே சொந்த ஊருக்கு சென்ற வடமாநில தொழிலாளர்களுக்கு பதிலாக, புதிய தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வரப்படுகிறது. இவ்வாறு கூறினர்.
'தொழில் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்'
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். குறிப்பாக பெருந்துறையில் மட்டும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர். அவர்களில் சொந்த ஊருக்கு சென்ற பெரும்பாலானோர் ஈரோடு திரும்பவில்லை.
இதற்கான காரணம், மத்திய அரசின் சிறப்பு திட்டங்களால், பீகார், ஒடிசா, மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட என அந்தந்த மாநிலங்களிலேயே தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழிலாளர், தங்களின் சொந்த மாநிலத்திலேயே பணிபுரிய முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் இது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இவ்விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி, தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க வேண்டும்.
வடமாநில தொழிலாளர்களுக்கு சாதகமான சலுகைகளை தமிழக அரசு வழங்கினால், அவர்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்புகள் அதிகம். அத்துடன் தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு சாதகமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.