UPDATED : அக் 22, 2026 07:44 PM
ADDED : அக் 22, 2026 07:41 PM
ஈரோடு: கோவையில் இருந்து மன்னார்குடிக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16616) இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து இன்று (அக்.,22) அதிகாலை, 12:30 மணிக்கு புறப்பட்டது. வழக்கமாக அதிகாலை, 2:00 மணிக்கு ஈரோட்டுக்கு வரும் ரயில், 30 நிமிடம் தாமதமாக இன்று வந்தது.
இந்நிலையில், இன்ஜினை அடுத்த மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில், வாலிபர் உடல் துாக்கில் தொங்கி கொண்டிருப்பதாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ஆசாமி அணிந்திருந்த சட்டையில் ஆதார் அட்டை இருந்தது. அதன் மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர குமார் நாகக், 28, என தெரிந்தது. உடலை பெட்டியில் இருந்து இறக்கி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ரயில், 30 நிமிடம் தாமதமாக, 3:19 மணிக்கு புறப்பட்டு சென்றது.
