/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் பள்ளி சிறுமியை கடத்திய முதியவர் கைது
/
ஈரோட்டில் பள்ளி சிறுமியை கடத்திய முதியவர் கைது
ADDED : பிப் 08, 2024 12:06 PM
ஈரோடு: ஈரோட்டில், நகைக்காக சிறுமியை கடத்திய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் ஆறு வயது மகள், அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 5 மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த போது, மர்ம நபர் ஒருவர் பைக்கில் சிறுமியை கடத்தி சென்றார். 1 மணி நேரம் கழித்து, தொழிலாளியின் கடை அருகே விட்டு சென்றார். கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
சிறுமி கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க, 250க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமரா பதிவுகள் ஆராயப்பட்டது. இதில், சிறுமியை கடத்திய நபரின் அடையாளம் தெரிந்தது. கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
இதில், கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த பெருமாள், 60, என்பவர் சங்ககிரியில் பலகார கடையில் வேலை செய்ததும், சிறுமியின் காதில் இருந்தது தங்கத்தோடு என நினைத்து கடத்தியதும், கவரிங் நகை என்ற தெரிந்த தோடு, சிறுமியும் அழுது கொண்டே இருந்ததால், அவரது தந்தை வேலை செய்யும் கடைக்கு முன், சிறுமியை கொண்டு வந்து விட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
பெருமாளை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். சிறுமி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, பஜாஜ் விக்ரண்ட் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

