/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் 2வது நாளாக மக்கள், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் 2வது நாளாக மக்கள், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் 2வது நாளாக மக்கள், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் 2வது நாளாக மக்கள், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : அக் 27, 2024 01:09 AM
அந்தியூர், அக். 27-
அந்தியூர் அருகே முத்துக்கவுண்டன்புதுாரை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர், ஊர் பொதுமக்கள் சார்பில், அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு கொடுத்தனர்.
அதில், 'நாங்கள் ஐந்து தலைமுறைகளாக பயன்படுத்தி வரும் நடைபாதையை ஒரு சிலர் வழிமறித்து, குழி தோண்டியுள்ளனர். இதனால் அவ்வழியே செல்ல முடியாமல், ௪ கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி செல்லாமல் வீட்டில் உள்ளனர். வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து தாசில்தார் கவியரசு சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தார்.
அந்த பாதைக்கு சொந்தமான இடத்தின் உரிமையாளர்கள், அருகிலுள்ள சுடுகாட்டில் மண்ணை எடுத்துள்ளனர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பாதையை மறிக்கும் வகையில் பெரிய பள்ளம் தோண்டியது தெரிய வந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று, 40க்கும் மேற்பட்டோர், அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இதில் பள்ளி மாணவ, மாணவியரும் ஈடுபட்டுள்ளனர். பவானி டி.எஸ்.பி., சந்திரசேகர், அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தாசில்தார் கவியரசு ஆகியோர், எதிர் தரப்பினரை தாலுகா அலுவலகத்துக்கு நேற்று வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
'அந்த நிலம் எங்களுடைய பட்டா நிலம். அதில் தற்போது யாரும் நடக்க வேண்டாம். அதற்கு பதிலாக வேறு இடம் தருகிறோம்' என்று தெரிவித்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களோ, 'நாங்கள் ஐந்து தலைமுறையாக நடந்து வந்த இடம் தான் எங்களுக்கு வேண்டும். அந்த பாதைதான், குழந்தைகள் பள்ளிக்கு சென்று வர பக்கமாக இருக்கும்' என்றனர். அந்த பாதையை ஒதுக்கும் வரை, தாலுகா அலுவலகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து, போராட்டத்தை தொடர்ந்தனர்.