சீரற்ற மின் வினியோகத்தால் சென்னிமலையில் மக்கள் பீதி
சீரற்ற மின் வினியோகத்தால் சென்னிமலையில் மக்கள் பீதி
ADDED : ஜூலை 26, 2026 05:53 AM

சென்னிமலை:சென்னிமலை அருகே சீரற்ற மின் வினியோகத்தால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னிமலை
அருகே பசுவபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பசவபட்டி பிரிவு,
வெப்பிலி பிரிவு, தோப்புக்காடு, வாய்க்கால்மேடு பகுதிகளில், ஒரு
மாதமாக பகல் மற்றும் நள்ளிரவில் சீரற்ற மின் சப்ளை கிடைத்து
வருகிறது. இதனால் விவசாயிகள் மும்முனை மின்சாரத்தை பயன்படுத்த
முடியாமல், வயல்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல்
சிரமப்படுகின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக நள்ளிரவு
நேரங்களில் சீரற்ற மின் சப்ளையால், வீடுகளில் பிரிட்ஜ், யு.பி.எஸ்.,
போன்ற மின் சாதனங்கள் சத்தத்தை எழுப்பி, குடியிருப்புவாசிகளை
அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து வெப்பிலி பிரிவு பகுதி
மக்கள் கூறியதாவது: கடந்த சில நாட்களாக மின் சப்ளை அதிக
அழுத்தத்துடனும், சில நேரங்களில் குறைவான அழுத்தத்துடனும்
கிடைப்பதால் மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் மின்
சாதனங்கள் பழுதடைகின்றன. மின்வாரிய அதிகாரிகள் சீரான மின்
வினியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
