/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'2 கோடி பயனாளிகளை சென்றடைந்த மக்களை தேடி மருத்துவம் திட்டம்'
/
'2 கோடி பயனாளிகளை சென்றடைந்த மக்களை தேடி மருத்துவம் திட்டம்'
'2 கோடி பயனாளிகளை சென்றடைந்த மக்களை தேடி மருத்துவம் திட்டம்'
'2 கோடி பயனாளிகளை சென்றடைந்த மக்களை தேடி மருத்துவம் திட்டம்'
ADDED : டிச 20, 2024 07:08 AM
ஈரோடு: தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம், 2 கோடி பயனாளிகளை சென்றடைந்துள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஈரோட்டில், முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வந்தவர், நிருபர்களிடம் கூறியதாவது: 'மக்களை தேடி மருத்துவம் திட்டம்' கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனபள்ளியில் முதல்வர் ஸ்டாலினால், 2021 ஆக., 5ல் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் டயபெட்டிக், ஹைப்பர் டென்ஷன், பிசியோதெரபி, டயாலிசிஸ் உட்பட தொற்றா நோய்களுக்காக வீடு தேடிச்சென்று மருத்துவம் பார்ப்பது, மருந்து தருவது நோக்கமாகும்.
இத்திட்டத்தின், 50 லட்சமாவது பயனாளிக்கு சென்னை சிட்லபாக்கம் பகுதியில் முதல்வரால் மருந்து பெட்டகம் தரப்பட்டது. திருச்சிக்கு வந்த முதல்வர், 1 கோடியே 1வது பயனாளிக்கும் மருந்து பெட்டகத்தை வழங்கினார். அடுத்த கட்டமாக இன்று (நேற்று), 2 கோடியாவது பயனாளியாகிய சுந்தராம்பாளுக்கு முதல்வர் கையால் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. முதல் முறை பயனாளிகள் என்ற முறையில், 2 கோடி பேர், தொடர் பயனாளிகள் என, 5 கோடிக்கும் மேலானவர்கள் பயன் பெறுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஏழு லட்சத்துக்கும் மேலானவர்கள் இத்திட்டத்தில் சிகிச்சை பெறுகின்றனர். நஞ்சனாபுரத்தில் மட்டும், 1,005 மக்கள் உள்ளனர். அதில், 136 பேர் மருத்துவ பயன் பெறுகின்றனர். கடந்த ஆட்சியில் அம்மா கிளீனிக் என்பது, 1,700 மருத்துவமனைகள் ஒரே ஒரு மருத்துவருடன் செயல்பட்டது. செவிலியர்கள் கூட இல்லாத இடமும் இருந்தது. அதை நாங்கள் மூடியதாக இ.பி.எஸ்., கூறியபோது சட்டசபையிலேயே பதில் கூறினேன். அம்மா கிளினிக் சுடுகாட்டிலும், குளியலறையிலும் கூட வைத்திருந்தீர்கள். அதுவும் மாநில நிதியாதாரம் இல்லை. ஓராண்டுக்கு என ஒப்புதல் வழங்கி திட்டத்தை நடத்தினர். ஓராண்டு முடிந்ததும், தானாக காலாவதியாகிவிட்டது.
சுடுகாட்டில் அம்மா கிளினிக் உள்ளது என கூறியதை, 'எங்கே' என இ.பி.எஸ்., கேட்டார். 'சைதாபேட்டை, சாரதி நகரில் வெஸ்ட் ஸோன் சுடுகாட்டு இடத்தில் ஒரு பகுதியில்தான் தற்போதும் இயங்குகிறது' எனக்கூறி கூட்டிக் கொண்டு போய் காட்டுகிறேன்,' என்றேன். மக்களை தேடி மருத்துவம் திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எங்கும் இல்லை என்பதால், ஐ.நா., சபையே விருது வழங்கி உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.