/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிரானைட் குவாரிக்கு மீண்டும் அனுமதி தரக்கூடாது கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் எதிர்ப்பு
/
கிரானைட் குவாரிக்கு மீண்டும் அனுமதி தரக்கூடாது கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் எதிர்ப்பு
கிரானைட் குவாரிக்கு மீண்டும் அனுமதி தரக்கூடாது கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் எதிர்ப்பு
கிரானைட் குவாரிக்கு மீண்டும் அனுமதி தரக்கூடாது கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் எதிர்ப்பு
ADDED : அக் 18, 2024 03:00 AM
கிரானைட் குவாரிக்கு மீண்டும் அனுமதி தரக்கூடாது
கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் எதிர்ப்பு
புன்செய் புளியம்பட்டி, அக். 18-
புன்செய்புளியம்பட்டி அருகே காரப்பாடி கிராமத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு, கிரானைட் குவாரி செயல்பட மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. கடந்த சில ஆண்டுகளாக குவாரி செயல்படவில்லை.
இந்நிலையில் குவாரியை மீண்டும் பல வண்ண கிரானைட் குவாரியாக செயல்பட அனுமதி வழங்குவது தொடர்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் தலைமையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். இதில் காரப்பாடி, கண்டிசாலை, செல்லம்பாளையம், தேவம்பாளையம், வடுகபாளையம், மாரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
'கிரானைட் குவாரி செயல்பட அனுமதித்தால், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் பாதிக்கும். கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையும். எனவே அனுமதி வழங்கக் கூடாது' என மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சமூக ஆர்வலர் முகிலன் பேசும்போது, திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் குவாரிகளால் விவசாயிகளுக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து தெரிவித்து கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற வெளியூரை சேர்ந்த ஒருவர் இடைமறித்து, 'திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் இங்கு செயல்படும் கிரானைட் கல் குவாரிக்கும் என்ன சம்பந்தம்?' என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள், அந்த நபரை பார்த்து, 'இந்த கூட்டத்துக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம்?' என கேள்வி எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட, பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்ட போலீசார் சமாதானப்படுத்தினர்.
மக்கள், விவசாயிகளின் கருத்துக்களை பதிவு செய்து கொண்ட அதிகாரிகள், 'சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்' என தெரிவிக்க, கூட்டம் நிறைவுக்கு வந்தது.