பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் போலீசாரை கண்டித்து சாலை மறியல்
பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் போலீசாரை கண்டித்து சாலை மறியல்
ADDED : செப் 11, 2026 06:32 AM
ஈரோடு;ஈரோட்டில்
பிரேத பரிசோதனை அறிக்கை தயார் செய்து கொடுப்பதில் போலீசாரிடையே
ஏற்பட்ட குழப்பத்தால், உயிரிழந்தவரின் உறவினர்கள் நேற்று சாலை
மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு, பெரியசேமூர், பூசாரி தோட்டம்
பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 46; சுமை தொழிலாளி. கடந்த ஆகஸ்ட் 10ல்
பைக்கில் சென்ற போது, ஈரோடு, பழையபாளையத்தில் முன்னே சென்ற பைக்கில்
மோதி கீழே விழுந்தார். இதில் காலில் முறிவு ஏற்பட்டது. நான்கு நாள்
சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்.
நேற்று முன் தினம் மாலை,
மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவரை ஈரோடு அரசு
மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். ஈஸ்வரனை
பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக
தெரிவித்தனர். நேற்று முன் தினம் இரவு அவரது உடல் ஈரோடு அரசு
மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
நேற்று
மாலை, 5:00 மணிவரை பிரேத பரிசோதனைக்கு போலீசார் நடவடிக்கை
எடுக்கவில்லை. ஏற்கனவே நடந்த விபத்தின் காரணமாக தான் உயிரிழந்தார்
என கூறிய வீரப்பன்சத்திரம் போலீசார், சூரம்பட்டி போலீசார் தான் பிரேத
பரிசோதனைக்கு அறிக்கை தயார் செய்து தர வேண்டும் என தெரிவித்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சூரம்பட்டி போலீசார், விபத்துக்கு பின்
சிகிச்சை பெற்று சரியாகி வீட்டுக்கு சென்று விட்டார். உடல்நல குறைவால்
தான் உயிரிழந்துள்ளார். எனவே வீரப்பன்சத்திரம் போலீசார் தான் பிரேத
பரிசோதனைக்கு அறிக்கை தயார் செய்து தர வேண்டும் என தெரிவித்தனர்.
இரு
தரப்பு போலீசார் நேற்று பிரேத பரிசோதனை செய்வதற்கான அறிக்கையை
தயார் செய்து வழங்கவில்லை. இந்நிலையில் இயற்கை மரணம் என பதிவு செய்து
அறிக்கை தயார் செய்து கொடுத்து இருக்கலாம் என அரசு டாக்டர்கள் யோசனை
தெரிவித்தனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை செய்யாததால்,
ஆத்திரமடைந்த ஈஸ்வரனின் உறவினர்கள், மாலை, 5:10 மணிக்கு
ஈரோடு-கோவை சாலையில், ஜி.ஹெச்., ரவுண்டானா முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அச்சாலையில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரோடு டவுன் டி.எஸ்.பி.
முத்துகுமார்
விசாரணை நடத்தி நாளை (இன்று ) காலை பிரேத பரிசோதனை உடனடியாக செய்து
கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து
அங்கிருந்தவர்கள், 20 நிமிடங்களுக்கு பின் கலைந்து சென்றனர்.
