ADDED : அக் 19, 2025 02:46 AM
ஈரோடு: ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே, கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் செயல்படுகிறது. இங்க, 400க்கும் மேற்பட்ட ஜவுளி கடை செயல்படுகிறது. தீபாவளி பண்டிகைக்காக இங்கு மக்கள் வந்து ஜவுளி எடுத்து செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக தி.மு.க.,வினர் மற்றும் போலீஸ் ஆதரவுடன், பன்னீர்செல்வம் பூங்கா முதல் மணிக்கூண்டு வரை, டி.வி.எஸ்., வீதி, பி.எஸ்.பார்க் ரவுண்டானா பகுதியிலும், 500க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள், வண்டி, கம்புகளில் கட்டை கட்டி ஜவுளிகளை கோர்த்து விற்பனை நடக்கிறது. இதனால் ஜவுளி வாங்க வருவோர், கனி மார்க்கெட் வளாகத்துக்குள் செல்லாமல் அங்குள்ள கடைகளுக்கும், பிற நிரந்தர கடைகளுக்கும் விற்பனை பாதிக்கிறது.இப்பிரச்னை நடக்கும் என அறிந்து, கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு, ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் மனு வழங்கியும், 'கவனிப்பை' பெற்று கடை நடத்த அனுமதித்துள்ளனர்.
இதனால், நேற்று மாலை, 6:40 - 7:10 மணி வரை கனி மார்க்கெட் ஜவுளி கடை வியாபாரிகள், பிற நிரந்தர கடை வைத்திருப்போரும் கனி மார்க்கெட் முன் மணிக்கூண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன், டவுன் இன்ஸ்பெக்டர் அனுராதா பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்துவதாகவும், பேரிகார்டுகளை அகற்றுவதாக உறுதியளித்த பின் கலைந்தனர். பின் சாலையில் உள்ள பேரிகார்டுகளை அகற்றி, ஆக்கிரமிப்பு கடைக்காரர்களை அப்புறப்படுத்தினர்.