/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'4வது செட் பள்ளி சீருடை உற்பத்தியை வழங்குங்கள்': கூட்டுறவு நெசவாளர்கள் எதிர்பார்ப்பு
/
'4வது செட் பள்ளி சீருடை உற்பத்தியை வழங்குங்கள்': கூட்டுறவு நெசவாளர்கள் எதிர்பார்ப்பு
'4வது செட் பள்ளி சீருடை உற்பத்தியை வழங்குங்கள்': கூட்டுறவு நெசவாளர்கள் எதிர்பார்ப்பு
'4வது செட் பள்ளி சீருடை உற்பத்தியை வழங்குங்கள்': கூட்டுறவு நெசவாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 31, 2024 06:58 AM
ஈரோடு: 'பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, 4வது செட் சீருடை உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்' என, கூட்டுறவு நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில், 1 முதல், 8 ம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு இலவச பள்ளி சீருடை, நான்கு செட் வழங்கப்படும். கைத்தறி துறை மூலம், கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம் மூலம் நிதி, ஆர்டர் வழங்கி உற்பத்தி செய்யப்படும். இத்துணியை, சமூக நலத்துறை மூலம் வழங்கி ஆடையாக தைத்து, பள்ளி கல்வித்துறைக்கு வழங்குவர்.
இதில், 'கேஸ்மட்' எனப்படும் ரகம் கைத்தறி, பெடல் தறியில், 20 லட்சம் மீட்டரும் மீதமுள்ள, 76 லட்சம் மீட்டர் துணிகள் விசைத்தறியில் உற்பத்தியாகும். தவிர, 1 முதல், 5ம் வகுப்பு வரை பச்சை கலரும், 6 முதல், 8 வரை சந்தன கலர் துணியும் சேர்த்து, 2.60 கோடி மீட்டர் துணிகள் விசைத்தறியில் உற்பத்தி செய்ய வேண்டும். இவற்றை தானியங்கி தறிகளுக்கு வழங்குவதாகவும், 4 செட் ஆடைக்கு பதில், 3 செட் மட்டும் தயார் செய்யப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபற்றி கூட்டுறவு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: விசைத்தறியில் உற்பத்தி செய்ய வேண்டிய துணிகளை தானியங்கி தறியில் உற்பத்தி செய்வதால், விசைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது. தி.மு.க., தேர்தல் அறிக்கை எண், 139ல், பள்ளி சீருடை அனைத்தும் விசைத்தறியில்தான் உற்பத்தி செய்யப்படும் என்ற வாக்குறுதிக்கு முரணானது. தவிர, வெளி மாநிலங்களிலும் துணியை கொள்முதல் செய்கின்றனர். 'கேஸ்மட்' ரகம் விசைத்தறிகளில், 3 செட் பள்ளி சீருடைக்கு மட்டுமே துணிகள் உற்பத்தி செய்து, சமூக நலத்துறைக்கு வழங்கி உள்ளனர். 4வது செட் ஆடைக்கான துணி உற்பத்தி பற்றி வாய் திறக்கவில்லை. இதில், 2 செட்களை தைத்து குழந்தைகளுக்கு வழங்கிவிட்டனர். 3வது செட் தையல் நிலையில் உள்ளது.
அனைத்து மாணவ, மாணவியருக்கும் சேர்த்து ஒரு செட் ஆடைக்கான துணி என்பது, 80 லட்சம் மீட்டராகும். மொத்தமுள்ள, 387 கோடி ரூபாயில், 4ல் 1 பங்கு துணிக்கான ஆர்டர் வழங்காததால், விசைத்தறியாளர் மட்டுமின்றி, பிளீச்சிங், பிரிண்டிங், ஆடையாக மாற்றும் தையல் கலைஞர்கள் வரை பாதிப்பார்கள். பள்ளி சீருடை துணியில், '40ஸ் கவுண்ட்' காட்டன் நுாலுக்கு பதில் பல இடங்களில் 'பிசி' எனப்படும் 'பாலிஸ்டர் காட்டன்' நுாலை பயன்படுத்தி உள்ளனர். முழு அளவில் அனைத்து குழந்தைகளுக்கும் தரமாக, 4 செட் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.