/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புரட்டாசி மூன்றாவது சனி வழிபாடு அமோகம்
/
புரட்டாசி மூன்றாவது சனி வழிபாடு அமோகம்
ADDED : அக் 06, 2024 02:47 AM
ஈரோடு: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் படையெடுவத்தனர். அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். இதனால் கூட்டம் அதிகரிக்கவே, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஈரோட்டில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்துாரி அரங்கநாதர், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோவிலில் நேற்று கிராம சாந்தியுடன் பிரம்மோற்சவ தேர் திருவிழா துவங்கியது. * புன்செய்புளியம்பட்டி அடுத்த கீழ்முடுதுறை திம்மராய பெருமாள் பெருமாள் கோவிலில், சுவாமிக்கு மகா அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. திம்மராய பெருமாள் தங்க காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்கள், தாசர்களுக்கு அரிசி படி வழங்கி சிறப்பு வழிபாடு செய்தனர். இதேபோல் புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள கோவில்புதூர் கரிவரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
* கோபி அருகே பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவிலில், அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ராஜகோபுரம் அருகே முகாமிட்ட தாசர்களுக்கு, அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை தந்து, மக்கள் ஆசி பெற்றனர். கோபி, ஈஸ்வரன் கோவில் வீதி மற்றும் மூலவாய்க்காலில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் திரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* அந்தியூர் பேட்டை பெருமாள் கோவிலில், பெருமாள் வெங்கடாஜலபதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல் கெட்டிசமுத்திரம் ஏரி அருகே கரைபெருமாள் கோவில், கைகாட்டி, கீழ்வாணி மற்றும் ஆப்பக்கூடல் பெருமாள் கோவில்களில், புரட்டாசி மூன்றாவது சனி வழிபாடு களை கட்டியது.
* சென்னிமலையை அடுத்த மேலப்பாளையம் ஆதிநாரயண பெருமாள் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். முருங்கத்தொழுவு கிராமம் வடுகபாளையத்தை அடுத்த மலை மீதுள்ள அணியரங்க பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வெள்ளோடு பெருமாள் கோவில், தண்ணீர்பந்தல் கிருஷ்ண பெருமாள் கோவில், கவுண்டம்பாளையம் வெங்கடேஷ பெருமாள் கோவில், மற்றும் சென்னிமலை டவுன், ஈங்கூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வ ரூப மகா விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு அபிேஷகம், பூஜை நடந்தது.