/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'தன் மீதல்ல நம் மீது கொண்ட அன்பே தவம்'
/
'தன் மீதல்ல நம் மீது கொண்ட அன்பே தவம்'
ADDED : ஆக 13, 2024 07:48 AM
ஈரோடு: ஈரோடு, சி.என்.கல்லுாரி வளாகத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்து வரும் ஈரோடு புத்தக திருவிழாவின், நேற்றைய மாலை அரங்கில், தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார். 'அறிவின் அறுவடை' தலைப்பில் சேலம் கைலாஷ் மகளிர் கல்லுாரி முன்னாள் முதல்வர் சங்கரநாராயணன் பேசினார்.
பின் 'அன்பே தவம்' என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: அன்பும், தவமும் பிரிக்க முடியாதது. சிவபெருமானை காண நாரதர் கைலாயம் சென்றார். செல்லும் வழியில் புற்று வளர்ந்த நிலையில் இறைவனை வேண்டிய துறவி தென்பட்டார். கைலாயம் செல்வதாக கூறிய நாரதரிடம், 'என்னை எப்போது கைலாயத்துக்கு அழைப்பார்' என கேட்டு வாருங்கள் என கூறினார். சிறிது துாரத்தில் புளிய மரத்தடியில் ஒரு இளைஞன், ஆடி, பாடி கொண்டிருந்தார். நாரதர் கைலாயம் செல்வதை அறிந்து, 'என்னை எப்போது கைலாயம் அழைப்பார்' என கேட்டு வாருங்கள் என்றான்.
கைலாயம் சென்று திரும்பிய நாரதர், துறவியிடம் 'இன்னும், 7 ஜென்மங்கள் கடந்தால் கைலாயம் அடையலாம்' என்றும், இளைஞரிடம், 'புளிய மரத்தின் இலைகளை எண்ணி, அத்தனை ஜென்மங்கள் கடந்ததும் கைலாயத்துக்கு அழைப்பாராம்' என்றும் கூறினார். இதைக்கேட்ட துறவியோ 'இன்னும், 7 ஜென்மமா' என வருந்தினார். இளைஞனோ 'என்னை கைலாயத்துக்கு சிவன் அழைப்பது உறுதி' என தெரிவித்தான். சிவபெருமான் மீது நம்பிக்கை கொண்ட இளைஞன் சில ஆண்டில் கைலாயம் சென்றார். பற்றற்ற பற்று துறவியிடம் இல்லாததால், கைலாயம் செல்ல தாமதமானது.
'பூசலார்' என்ற அடிகளார், சிவபெருமானுக்கு இதயத்திலேயே பெருங்கோவிலை ரசித்து ரசித்து கட்டினார். அதுபோல கண்ணப்பனார், திருநீலகண்டர் என சொல்லிக் கொண்டே போகலாம். தன் மீது அல்லாமல் நம் மீது கொண்டுள்ள அன்பே தவம். இவ்வாறு அவர் பேசினார். புத்தக திருவிழா நிறைவு நாளான இன்றைய மாலை நேர அரங்கில், விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பேசுகிறார்.

