/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையோர வியாபாரிகள் குழு உறுப்பினர் தேர்தல்
/
சாலையோர வியாபாரிகள் குழு உறுப்பினர் தேர்தல்
ADDED : செப் 30, 2025 12:54 AM
ஈரோடு, ஈரோடு மாநகரில் பல்வேறு பகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சாலையோர வியாபாரிகள், தலையில் சுமந்து விற்பனை செய்பவர்கள் மற்றும் தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்பவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை தேசிய நகர்ப்புற வியாபாரிகள் கொள்கை வாயிலாக மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் மூலம் வியாபாரிகள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டு, 964 நபர் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில், 280 பேருக்கு போட்டோவுடன் அடையாள அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். இவர்கள் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறின்றி வியாபாரம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நகர சாலையோர வியாபாரிகள்குழு அமைத்து, உரிய கட்டணங்கள் நிர்ணயித்து, வியாபாரம் செய்யக்கூடிய பகுதி கண்டறியப்படவுள்ளது. இவர்களின் பிரச்னைகள் குறித்து பேச, 15 நபர் கொண்ட நகர விற்பனைக்குழு அமைக்கப்படவுள்ளது. மாநகராட்சி கமிஷனரை தலைவராக கொண்ட இந்த குழுவில் ஆறு உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல், மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. ஓட்டு எண்ணப்பட்டு மாலை, 6:00 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.