/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.4.53 லட்சம் பறிமுதல்
/
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.4.53 லட்சம் பறிமுதல்
ADDED : மே 02, 2025 01:23 AM
தாராபுரம்:
தாராபுரம், சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினர், நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத, 4.53 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், நேற்று மதியம், 3:30 மணியளவில், வழக்கம்போல் பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். அலுவலகத்தின் கதவுகளை உள்புறமாக பூட்டிக் கொண்டு, 5 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். புதிதாக யாரையும் உள்ளே வர அனுமதிக்கவில்லை, அலுவலகத்திற்குள் இருந்தவர்களை, வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், அலுவலக வளாகத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அதிகாரிகள் கூறியதாவது: அலுவலகத்திற்குள் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறையில் பிளாஸ்டிக் கவரில், 500 ரூபாய் நோட்டுக்களாக, மூன்று லட்சம் ரூபாய் இருந்ததாகவும், பத்திரப்பதிவு தொடர்பாக, அலுவலகத்திற்கு வந்த அலங்கியம் முத்துசாமி என்பவரிடம், 1.50 லட்சம் ரூபாய் மற்றும் பத்திரப்பதிவு தரகர் அலுவலக ஊழியர் நடராஜன் என்பவரிடம் இருந்த, 3,000 ரூபாய் என, மொத்தம், 4.53 லட்சம் ரூபாய் கணக்கில் வராத தொகை பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு கூறினர்.