ADDED : ஆக 20, 2026 06:00 AM
ஈரோடு:ஈரோட்டில், உரம் வாங்க மொபட்டில் சென்ற விவசாயியை மிரட்டி, ரூ.50 ஆயிரத்தை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
ஈரோடு,
கதிரம்பட்டி லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அபிமன்னன், 58,
விவசாயி. உரம் வாங்க கடந்த 17 காலை, 11:00 மணிக்கு மொபட்டில்,
மேட்டுக்கடையில் இருந்து நசியனுார் சாலையில் சூர்யா நகர் அருகே சென்று
கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் பைக்கில் வந்த இருவர், தனது மொபைல்
போனை தவற விட்டுவிட்டதாகவும் அதனை தாங்கள் எடுத்து செல்வதாகவும்
கூறினர். பின்னர் பாக்கெட்டில் என்ன வைத்து இருக்கிறீர்கள் என
கேட்டுள்ளனர்.
அபிமன்னன் பாக்கெட்டில் 50 ஆயிரம் ரூபாய்
வைத்திருப்பதாக கூறி, அதனை வெளியே எடுத்து காட்டியுள்ளார். பணத்தை
பைக்கில் வந்தவர்கள் பறித்து கொண்டு, கண் இமைக்கும் நேரத்தில்
அங்கிருந்து தப்பினர்.
ஈரோடு தாலுகா போலீசார் விசாரித்து
வருகின்றனர்.
