ADDED : அக் 08, 2026 04:39 AM
ஈரோடு:இளைஞர்
எழுச்சி நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான
அறிவியல் கண்காட்சி போட்டி, பேச்சு, கட்டுரை போட்டி நடந்தது.
மறைந்த
முன்னாள் ஜனாதி பதி அப்துல் கலாமின் பிறந்த நாளை, இளைஞர் எழுச்சி நாளாக
கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பள்ளியில் பயிலும் மாணவ,
மாணவியருக்கு, 6 முதல் 8ம் வகுப்பு ஒரு பிரிவு, 9, 10 மற்றொரு பிரிவு,
பிளஸ் 1, பிளஸ் 2 ஒரு பிரிவு என மூன்று பிரிவாக ஏற்கனவே பள்ளி அளவில்
கட்டுரை, பேச்சு மற்றும் அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி
நடத்தப்பட்டது.
நேற்று மாவட்ட அளவிலான போட்டி, ஈரோடு ப.செ.பார்க்
அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பேச்சு பேட்டியில்
128, கட்டுரை போட்டியில் 111 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அறிவியல்
கண்காட்சியில், 81 படைப்பு காட்சிப்படுத்தப்பட்டன. இதில் அரசு,
நிதியுதவி பெறும் பள்ளி மட்டுமின்றி தனியார் பள்ளி மாணவ, மாணவியர்
பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
அறிவியல் கண்காட்சியை
பார்வையிட்டு, சிறந்த படைப்புகளை நடுவர்களாக நியமிக்கப்பட்ட
ஆசிரியர்கள் வகைப்படுத்தினர். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக
உதவியாளர் வெங்கடேசன், மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற
ஒருங்கிணைப்பாளர் கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில்
மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெறுவோர், மாநில போட்டிக்கு தகுதி
பெறுவர் என பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
