'செகண்ட் சேல்ஸ்' ஜவுளி விற்பனை கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்
'செகண்ட் சேல்ஸ்' ஜவுளி விற்பனை கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்
UPDATED : நவ 10, 2026 05:13 AM
ADDED : நவ 10, 2026 04:20 AM

ஈரோடு; ஈரோடு மாநகரில் ஆர்.கே.வி.சாலை, மணிகூண்டு, காவிரி சாலை, ஈஸ்வரன் கோவில் வீதியில் ஜவுளி கடைகள் ஏராளமாக உள்ளன. வழக்கமாக தீபாவளிக்கு மறுநாள் அதிகாலையில் இங்குள்ள கடைகளில், பிராண்டட் ஜவுளி ரகங்கள், 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக நேற்று அதிகாலை, 3:00 மணிக்கே மக்கள் தள்ளுபடி விலையில் ஜவுளி வாங்க குவிந்தனர். இதனால் மாநகர வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பேண்ட், சர்ட், சுடிதார், சேலைகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளி ரகங்களை, ஈரோடு மட்டுமின்றி சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் வந்தனர். இதனால் அதிகாலை நேரத்திலேயே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கூட்டத்தை கடைக்காரர்களே சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். காலை, 7:00 மணிக்கு தள்ளுபடி விற்பனை நிறைவு பெற்றது. அதன் பின்பும் காலையில், 9:30 மணி முதல் ஆர்.கே.வி.சாலை, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஜவுளி வாங்க வந்தவர்கள் டூவீலர்களை காவிரி சாலையிலேயே நிறுத்தி சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
