அரிசி இருப்பு வாராந்திர நிலை ஆலை உரிமையாளர்கள் முடிவு
அரிசி இருப்பு வாராந்திர நிலை ஆலை உரிமையாளர்கள் முடிவு
ADDED : நவ 10, 2026 04:19 AM
ஈரோடு: மத்திய அரசின் அறிவிப்பின்படி, தங்களிடம் இருப்பு உள்ள நெல், அரிசி வாரந்தோறும் கணக்கு காட்டப்படும் என ஈரோடு மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரிசி விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. நெல் விளைச்சல் இல்லாததே இதற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. ஆனால் சிலர் அரிசியை இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பதால் தான் விலை உயர்வதாக கருத்து நிலவுகிறது.இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு தென் மாநிலங்களான கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவில் உள்ள அரிசி ஆலைகள், அரிசி விற்பனையாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறையை அறிவித்துள்ளது. இதன்படி வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அரிசி ஆலை உரிமையாளர், விற்பனையாளர்கள் தங்களிடம் இருப்பு உள்ள நெல், அரிசியின் அளவு, விற்பனை அளவு உள்ளிட்டவற்றை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். 2027 ஜனவரி 31 வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க துணை செயலாளர் சந்திரசேகர் கூறியதாவது:
ஆடிட்டரிடம் பேசி அரிசி, நெல் இருப்பு குறித்தும், விற்பனை குறித்தும் ஆன்லைன் மூலம் மத்திய அரசுக்கு தெரிவிக்க உள்ளோம். அரிசி தட்டுப்பாட்டால் பஞ்சம் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து மத்திய அரசு, நிலைமையை சமாளிக்கும் விதமாக முன் ஏற்பாடாக தகவல் சேகரிக்கிறது. 70 சதவீதம் தகவல் கிடைத்தாலே நிலைமையை உணர்ந்து நெல், அரிசி தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். இம்முறை ஏற்கனவே இருந்தது தான். நெல் அறுவடை சீசன் வந்தவுடன் இம்முறையை அரசு கைவிடும்.
இதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அரசு கோரியவாறு நெல், அரிசி இருப்பு மற்றும் விற்பனை விபரங்களை தெரிவிப்போம். இவ்வாறு கூறினார்.
