ADDED : மார் 31, 2024 04:23 AM
தேர்தல் விதிமீறல்;
3 வழக்குகள் பதிவு
ஓசூர்: சூளகிரி அடுத்த பி.கொத்தப்பள்ளியை சேர்ந்த பீரப்பா என்பவரது வீட்டின் சுவற்றில், தேர்தல் விதிமுறைகளை மீறி, காங்., கட்சியின் கை சின்னம் வரையப்பட்டிருந்தது. இதை அவ்வழியாக ரோந்து சென்ற சூளகிரி ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., வெங்கடேசன் பார்த்து விசாரித்தார். இதில், தி.மு.க., உறுப்பினரான, சூளகிரியை சேர்ந்த சுமதி என்பவரது ஏற்பாட்டில் சின்னம் வரையப்பட்டது தெரிந்தது. இதனால் சுமதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில் ஆர்ச் முதல், வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் வரை, தேர்தல் விதிமுறைகளை மீறி, முன் அனுமதி பெறாமல், பா.ஜ., கட்சி கொடிக் கம்பங்கள் கட்டப்பட்டிருந்தன. தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., காளியப்பன் புகார்படி, பா.ஜ., தேன்கனிக்கோட்டை நகர தலைவர் வெங்கட் மீது, வழக்குப்பதியப்பட்டது.
* ஊத்தங்கரை அடுத்த, மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் சுதாகர், 42, இவர் அதேபகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் வீட்டின் சுவற்றில், தேர்தல் அலுவலர் அனுமதி பெறாமல், காங்., கட்சியின் கை சின்னம் வரைந்துள்ளார். தேர்தல் பறக்கும் படை ஊத்தங்கரை, ஏ.பி.டி.ஓ., காந்திமதி புகார் படி, சிங்காரப்பேட்டை எஸ்.ஐ., அண்ணாமலை, சுதாகர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.
கற்கள் கடத்தியலாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கனிம மற்றும் புவியியல் துறை சிறப்பு ஆர்.ஐ., கிருஷ்ணப்பா மற்றும் அதிகாரிகள், பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி - அச்சமங்கலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் நின்ற ஒரு டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் கற்கள் கடத்தியது தெரிந்தது. அதிகாரிகள் புகார் படி கந்திகுப்பம் போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
விநாயகர் சிலை திருட்டு
ஓசூர், மார்ச் 31-
தேன்கனிக்கோட்டை அடுத்த அண்ணசாகரம் கிராமத்திலுள்ள ஏரிக்கரையில், சிறிய அளவில் ரட்சை அமைத்து, விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, பல ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இச்சிலையை நேற்று முன்தினம் இரவு, மாருதி காரில் வந்த மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதையறிந்த பக்தர்கள் நேற்று காலை கோவில் முன் திரண்டனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
மது கடத்தியஆட்டோ டிரைவர் கைது
ஓசூர்: ஓசூர் மத்திகிரி ஸ்டேஷன் போலீசார், கர்னுார் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது, 240 பாக்கெட் கர்நாடகா மதுபானம் இருந்தது. இதனால் ஆட்டோ டிரைவரான, ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த மஞ்சுநாத், 44, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபான பாக்கெட்டுகள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
மொபட் - பஸ் மோதல்விவசாயி பலி
கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், அதகப்பாடி அடுத்த ஏ.செக்காரப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன், 34, விவசாயி. இவர், கடந்த, 28ல் ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இரவு, 10:00 மணியளவில், பையூர் அருகே கிருஷ்ணகிரி - -தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில், பாண்டியன் பலியானார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

