ADDED : மார் 31, 2024 04:00 AM
ஈரோடு தொகுதியில்
௩௧ வேட்பாளர்கள்
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள், ஏழு லட்சத்து, 15 ஆயிரத்து 617. பெண் வாக்காளர்கள் ஏழு லட்சத்து, 46 ஆயிரத்து 355. மூன்றாம் பாலினத்தவர் 104 பேர். மொத்தம், 14 லட்சத்து, 62 ஆயிரத்து 76 பேர் உள்ளனர். இவர்களுக்காக, 1,688 ஓட்டுசாவடிகள் உள்ளன. கடந்த, 20ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. 27ல் நிறைவு பெற்றது.
மொத்தம், 44 பேர் மனு செய்திருந்தனர். பரிசீலனைக்கு பின், 37 மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள். ஆறு பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால், 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில்லாமல் நோட்டாவும் உண்டு.
இறுதி வேட்பாளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா, நேற்றிரவு, 11:00 மணியளவில் வெளியிட்டார்.
பா.ஜ.,வில் இணைந்த
கல்லுாரி மாணவர்கள்
தாராபுரம்: திருப்பூர் மாவட்ட பா.ஜ., தலைவர் மங்களம் ரவி, மாவட்ட மகளிரணி தலைவி கார்த்திகா முன்னிலையில், தாராபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ௧௦க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், பா.ஜ.,வில் இணைத்து கொண்டனர். பிரதமர் மோடியின் செயல்பாடு, தங்களை கவர்ந்ததால், கட்சியில் சேர்ந்ததாக கூறினர்.
மொபட் திருடியவர் கைது
தாராபுரம்: தாராபுரம், வசந்தா ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன், 51; கடந்த, 2022ல் இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி திருட்டு போனது. புகாரின்படி தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார், களவாணியை தேடி வந்தனர்.
இது தொடர்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த வினோத்குமார், 29, என்பவரை கைது செயனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
ரூ.23 லட்சத்துக்கு
விளைபொருள் ஏலம்
பவானி: பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 225 மூட்டை எள் வரத்தானது.
வெள்ளை ரகம் கிலோ, 128 ரூபாய் முதல் 136 ரூபாய்; சிவப்பு ரகம் கிலோ, 124 ரூபாய் முதல் 137 ரூபாய்; கறுப்பு ரகம் கிலோ, 124 ரூபாய் முதல் 142 ரூபாய்க்கு விலை போனது. ஐந்து மூட்டை தேங்காய் வரத்தாகி, ஒரு கிலோ, 61-88 ரூபாய் வரை விற்றது. 762 தேங்காய் வரத்தாகி, ஒரு காய் ஏழு ரூபாய் முதல் 13 ரூபாய்; மூன்று மூட்டை கேழ்வரகு வரத்தாகி, கிலோ 30 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை விலை போனது. மொத்தம் அனைத்து விளைபொருட்களும், 23 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
ஸ்கூட்டியில் வந்து
ஆடு திருடிய இருவர்
பவானி: அம்மாபேட்டை அருகே கண்ணப்பள்ளி வெங்கட்ரெட்டியூரை சேர்ந்தவர் சந்தானம், 45; பத்திர எழுத்தர். ஒரு வெள்ளாடு வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் கட்டியிருந்த ஆடு மாயமானது.
இதனால் முளியனுார், குறிச்சி பிரிவு, நத்தமேடு பிரிவு, பூனாச்சி பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை, சந்தானம் ஆய்வு செய்தார். அதில் இரண்டு மர்ம நபர்கள், ஸ்கூட்டியில் ஆட்டை திருடி சென்றது பதிவாகியிருந்தது. அவர் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

