/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவகிரி, பல்லடம் தோட்டத்து வீடு கொலைகளில் தொடர்புடைய கொடூரர்கள் சுற்றிவளைப்பு; முதிய தம்பதி கொலை வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி
/
சிவகிரி, பல்லடம் தோட்டத்து வீடு கொலைகளில் தொடர்புடைய கொடூரர்கள் சுற்றிவளைப்பு; முதிய தம்பதி கொலை வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி
சிவகிரி, பல்லடம் தோட்டத்து வீடு கொலைகளில் தொடர்புடைய கொடூரர்கள் சுற்றிவளைப்பு; முதிய தம்பதி கொலை வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி
சிவகிரி, பல்லடம் தோட்டத்து வீடு கொலைகளில் தொடர்புடைய கொடூரர்கள் சுற்றிவளைப்பு; முதிய தம்பதி கொலை வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி
ADDED : மே 20, 2025 01:10 AM

ஈரோடு : தமிழகத்தை உலுக்கிய, தோட்டத்து வீடுகளில் தனியாக வசித்த முதிய தம்பதியரை நோட்டமிட்டு கொலை செய்த மூன்று கொடூரர்கள், திருட்டு நகையை வாங்கி உருக்கி தந்த நகை வியாபாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேலும் பல வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சிவகிரி, விளக்கேத்தி, உச்சிமேடு, மேகரையான் தோட்டத்தில் வசித்த ராமசாமி - பாக்கியம் என்ற முதிய தம்பதியை, ஏப்ரலில் கொலை செய்து, 11 சவரன் திருடி சென்றனர். கொலையாளிகளை, 12 தனிப்படை அமைத்து போலீசார் தேடினர்.
நகைக்கடை
இந்நிலையில், பழைய குற்றவாளிகளான ஈரோடு மாவட்டம், அறச்சலுார், வீரப்பம்பாளையம் ஆச்சியப்பன், 48, ரமேஷ், 54, அறச்சலுார் மாதேஸ்வரன், 52, ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்களிடம் ஒரு மொபைல்போன், உருக்கிய நிலையில் நகை, மூன்று டூ - வீலர் மற்றும் இரண்டு மர கைப்பிடி, கையுறை கைப்பற்றப்பட்டன. நகையை உருக்கி கொடுத்த, பசுவபட்டி, சென்னிமலை பாளையத்தைச் சேர்ந்த ஞானசேகர், 35, நேற்று கைது செய்யப்பட்டார். இவர் சென்னிமலையில் நகைக்கடை வைத்துள்ளார்.
இது தொடர்பாக, மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார் நேற்று அளித்த பேட்டி:
திருப்பூர் மாவட்டம், பல்லடம், அவிநாசிபாளையம், சேமலை கவுண்டன்பாளையத்தில் வசித்த தெய்வசிகாமணி - அலமேலு தம்பதி, அவர்களின் மகன் செந்தில்குமார் ஆகியோரை 2024 நவ., 28ல் கொலை செய்து, ஐந்தரை சவரன் நகை, ஒரு மொபைல்போனை திருடி சென்றதை, கைதான மூவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., வசம் உள்ளது.
இவர்கள் மேலும் சில குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.
கொலைக்கு முன், ராமசாமி தோட்ட வீட்டை, 10 நாட்களாக ரமேஷ் கண்காணித்துள்ளார். இவர்கள் மூவரும் வெவ்வேறு பகுதிகளில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2015ல் மூவர் மீதும் ஐந்து திருட்டு வழக்குகள் இருந்தன; ஒன்பது மாதம் சிறையில் இருந்தனர். அதன் பின், வழக்குகளில் இருந்து மூவரும் விடுதலையாகி விட்டனர். 2015 முதல் மூவரும் சேர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
'சிசிடிவி' கேமரா
இவர்களுடன் ஆனந்த் என்பவரும் இருந்துள்ளார். ஆனால், சிவகிரி கொலை சம்பவத்துக்கு அவர் வரவில்லை. அவரது நடவடிக்கை, செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது. 'சிசிடிவி' கேமரா காட்சிகள் அடிப்படையில் கொலையாளிகள் பிடிபட்டனர்.
தேங்காய் பறித்து, உரிக்கும் தொழிலில் ஈடுபட்ட ஆச்சியப்பன், வேலையின் போது தோட்ட வீடுகளை நோட்டம் பார்த்து, திருட்டு சம்பவங்களை நிறைவேற்ற திட்டம் வகுத்துள்ளார். மூவரையும் விரைவில் கஸ்டடி எடுத்து, ஏற்கனவே இவர்கள் கூறிய குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கோவை டி.ஐ.ஜி., சசிமோகன், எஸ்.பி., சுஜாதா உடனிருந்தனர். பல்லடம் மூவர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வருவதால், தற்போது சிவகிரி வழக்கில் கைதானவர்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

