ADDED : மார் 31, 2024 04:19 AM
கனி மார்க்கெட் வளாகம் முன்
ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்பு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் முக்கிய சாலை மற்றும் வீதிகளில் சாலையோர வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகளின் ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் அகற்றியது. இதில் கனி மார்க்கெட் வணிக வளாகம் முன்பும் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஏராளமான கடைகள் அகற்றப்பட்டன. அப்பகுதியில் மீண்டும் சாலையோர கடைகள் முளைத்தன. மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்ததால், ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து கடைகளை அகற்றி கொண்டனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் பேரிகார்டு வைத்து தடுப்பு போடப்பட்டுள்ளது. அங்கிருந்த பஸ் ஸ்டாப்பும் அருகேயுள்ள பகுதிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதி மீறல்
மத்திய அமைச்சர் மீது வழக்கு
ஈரோடு: சத்தி அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா கடந்த, 26ல் நடந்தது. கோவிலுக்கு வந்த நீலகிரி லோக்சபா பா.ஜ., வேட்பாளரும், மத்திய அமைச்சருமான முருகன் தரிசனம் செய்தார். பின் சத்தியில் திருமண மண்டபத்தில் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்கு தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெறவில்லை. இதுகுறித்து பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் சத்தி போலீசார், மத்திய அமைச்சர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா, பெருந்துறையில் நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்கு அனுமதி பெறவில்லை என்று, பறக்கும் படையினர் அளித்த புகாரின்படி, சென்னிமலை ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமசாமி மீது, பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரூ.2.89 லட்சம் பறிமுதல்
பவானி--
பவானி அருகே தொட்டியபாளையத்தில், வாகன தணிக்கையில் பறக்கும் படையினர் நேற்று ஈடுபட்டனர். கர்நாடகா மாநிலம் சுந்தரஹள்ளியை சேர்ந்த குமார், உரிய ஆவணமின்றி கொண்டு வந்த, 84 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பவானி கூடுதல் உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
* பவானி அருகே பட்லுார் நால்ரோட்டில், வாகன தணிக்கையில் பறக்கும் படையினர் நேற்று ஈடுபட்டனர். ஆந்திர மாநிலம் லக்னப்பள்ளியை சேர்ந்த சுரேஷ், உரிய ஆவணமின்றி, ஒரு லட்சத்து, ௫,௦௦௦ ரூபாயை கொண்டு வந்தார். பணத்தை கைப்பற்றி, பவானி கூடுதல் உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
* சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தில், பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த டெம்போவில், புளியம்பட்டியை சேர்ந்த ராம்குமார் உரிய ஆவணமின்றி ஒரு லட்சம் ரூபாய் வைத்திருந்தார். பணத்தை பறிமுதல் செய்தனர்.
மின் வாரிய அலுவலகத்தில்
'முதல்வர்' காலண்டர் அகற்றம்
ஈரோடு: லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைப்படி, அரசு அலுவலகங்களில் முதல்வர் படத்தை அகற்ற வேண்டும். ஆனால் ஈரோட்டில் இ.வி.என் சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில், மின் கட்டணம் செலுத்தும் பகுதி, அலுவலகத்துக்குள் மின்வாரியத்தால் வழங்கப்பட்ட காலண்டர் தொங்கவிடப்பட்டு இருந்தது.
அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி படங்கள் இருந்தன.
இதையறிந்த அறிந்த அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் துரை சேவுகன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணை செயலாளர் கார்த்தி ஆகியோர், விதிமீறலை சுட்டிக்காட்டி ஆட்சேபம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த நான்கு காலண்டரும் அகற்றப்பட்டது. தகவலறிந்து சென்ற பறக்கும் படையினர், காலண்டர்களை கைப்பற்றி
பறிமுதல் செய்தனர்.
கமல் பிரசாரத்தில் பணம் சப்ளை
கலெக்டரிடம் பா.ஜ., புகார்
ஈரோடு, மார்ச் 31-
ஈரோடு லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், வீரப்பன்சத்திரம் மற்றும் கருங்கல்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வாகனங்களில் நுாற்றுக்கணக்கான மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். கூட்டம் முடிந்த பின், பிரசாரத்துக்கு வந்தவர்களுக்கு, தலா, 200 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலரான ராஜகோபால் சுன்கராவுக்கு, கோவையை சேர்ந்த பா.ஜ,, - ஐ.டி., விங்க் நிர்வாகி பூங்கொடி சுகத், எக்ஸ் தளத்தில் புகாரளித்துள்ளார். மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்த வீடியோ ஒன்றையும், அதில் இணைத்துள்ளார். நீங்கள் அனுப்பிய வீடியோவை, விசாரணைக்காக காவல்துறைக்கு அனுப்பியுள்ளோம் என்று, எக்ஸ் தளத்திலேயே கலெக்டர் பதில் தெரிவித்துள்ளார்.

