தண்ணீரில் மூழ்கி
5 மாணவர்கள் மரணம்
கோவை: கோவை மாவட்டம் பச்சாபாளையத்தை சேர்ந்த நண்பர்கள் பிரவீன், 17, கவின், 16, தக் ஷன், 17, சஞ்சய், 21. இவர்களில் பிரவீன், தக் ஷன் ஆகியோர் தீத்திபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். கவின், 10ம் வகுப்பு படித்துள்ளார். நண்பர்கள் நான்கு பேரும், இருட்டுபள்ளம் அடுத்த பெருமாள்கோவில்பதியில் உள்ள தடுப்பணையில் நேற்று மாலை குளிக்க சென்றனர். சஞ்சய் மட்டும் நீரில் இறங்கி மேலே வந்த நிலையில், மற்ற மூவரும் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். மூவருக்கும் நீச்சல் தெரியாததால் மூழ்கினர். இதை கண்ட சஞ்சய் கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பிரவீன், கவின், தக் ஷன் ஆகியோரை மீட்டனர். அதற்குள், மூவரும் இறந்து விட்டனர்.
அதுபோல கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை அடுத்த ஜம்பை கிராமத்தில் நீச்சல் பழக சென்ற இருவர், நீரில் மூழ்கி இறந்தனர். அந்த கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் சுப்புலட்சுமி, 12, மகன் கார்த்திக், 11. இருவரும் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முறையே, 6 மற்றும் 5ம் வகுப்பு படித்து வந்தனர்.
பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து, இருவரும் நேற்று காலை தங்களது நிலத்தில் இருந்த கிணற்றில் நீச்சல் பழகிய போது, நீரில் மூழ்கி இறந்தனர்.
கத்தியால் குத்தியதில்
வாலிபர் படுகாயம்
தாராபுரம்: தாராபுரம் அருகே, கத்தியால் குத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள வீராச்சிமங்கலத்தை சேர்ந்தவர் பாரதிராஜா, 45. இவர் நேற்று முன்தினம், வீராச்சிமங்கலத்தில் காவடி சென்ற போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த முருகானந்தம், 27, என்பவர் மது போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், முருகானந்தம், கத்தியை எடுத்து பாரதிராஜாவை சரமாரியாக குத்தினார். இதில், படுகாயம் அடைந்த பாரதிராஜா, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, கோவை கொண்டு செல்லப்பட்டார். தாராபுரம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

