ADDED : மே 17, 2024 02:12 AM
போலீஸ் பிடியில் இருந்து
தப்பிய பெண்ணால் பகீர்
காங்கேயம்: திருப்பூர், வி.கல்லிப்பாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி மகள் தங்கமணி, 32, திருமணம் ஆகாதவர். கடந்த, 6ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். காமநாய்க்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் புகாரளித்தனர். இந்நிலையில் ஊதியூர் பகுதியில் சுற்றித்திரிந்த தங்கமணியை, ஊதியூர் போலீசாரிடம் அப்பகுதியினர் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரித்தபோது சற்று மனநலம் பாதிக்கப்பட்டது போல் தெரியவே, திருப்பூரில் காப்பகத்தில் சேர்க்க, போலீசார் அழைத்து சென்றனர். ஒரு கடையில் அவருக்கு தெவையான பொருட்களை வாங்கும்போது, போலீசாரிடம் இருந்து பெண் தப்பி விட்டார். சிறப்பு குழு அமைத்து, ஊதியூர் போலீசார் தேடி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பெண் பலிகாங்கேயம்: காங்கேயம், மூர்த்தி ரெட்டிபாளையத்தை சேர்ந்த ரவி மகள் நிவேதா, 20; காங்கேயத்தில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். அப்பகுதியை சேர்ந்த பிரகலாதனை காதலித்தார். குடும்பத்தார் சம்மதத்துடன், கடந்த ஜன., மாதம் திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் மாலை வீட்டு பாத்ரூமில் குளிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை. பிரகலாதன், அவரது குடும்பத்தினர் பாத்ரூமின் சிமெண்ட் அட்டையை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். மயங்கி கிடந்தவரை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் இறந்து விட்டது தெரிந்தது. காங்கேயம் போலீசார் விசாரணையில், பாத்ரூமில் ஒயரில் மின்சாரம் கசிந்து தாக்கியதில் இறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
லாரி மீது லோடு ஆட்டோ மோதியதில் விவசாயி சாவு
காங்கேயம்: காங்கேயம்-சென்னிமலை சாலை வாய்க்கால் மேடு அருகே, சாலையோரம் ஒரு லாரி நேற்று மதியம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது காங்கேயத்தில் இருந்து லோடு ஆட்டோவில் தொங்குட்டிபாளையத்தை சேர்ந்த சதீஸ்குமார், 43; நிழலி பகுதியை சேர்ந்த பாலு, 29; கொடுவாய் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், 40, ஆகியோர் சென்றனர். மூவரும் விவசாய செய்து வருகின்றனர். சாலையோரம் நின்ற லாரியின் பின்னால் ஆட்டோ மோதியது. இதில் ஓட்டுனர் இருக்கை அருகே அமர்ந்திருந்த விஸ்வநாதன் மார்பில், லாரியின் இரும்பு கம்பி துளைத்ததில் சம்பவ இடத்தில் பலியானார். படுகாயம் அடைந்த மற்ற இருவரையும், அப்பகுதி மக்கள் மீட்டு, காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

