ADDED : மே 25, 2024 02:23 AM
கட்டட மேஸ்திரியை
வெட்டியவர் கைது
கோபி: கோபி அருகே புதுவள்ளியாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 49, கட்டட மேஸ்த்திரி; அதே ஊரை சேர்ந்த, பூவரசன், 26, கட்டட தொழிலாளியாக பணிபுரிந்தார். இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. கடந்தாண்டு மகனுடன் சேர்ந்து பூவரசனை ராஜேந்திரன் தாக்கினார். இதுகுறித்த புகாரில் தந்தை, மகன் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜேந்திரன் வீட்டுக்குள் காம்பவுன்ட் சுவர் ஏறி குதித்து பூவரசன் சென்றார். துாங்கி கொண்டிருந்தவரை அரிவாளால் வெட்டி விட்டு ஓடினார். பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்ந்த ராஜேந்திரன் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் பூவரசனை நேற்றிரவு கைது செய்தனர்.
திம்பம் மலைப்பாதையில்பனி மூட்டத்தால் அவதி
சத்தியமங்கலம்: தாளவாடி, ஆசனுார், திம்பம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்கிறது. இதனால் திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் திண்டாடி போயினர். முகப்பு விளக்குகளை எரிய விட்டாலும், சில அடி துாரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாமல், அச்சத்துடன் வாகனங்களை இயக்கினர்.
தனியார் பள்ளியில் திருட்டுதாராபுரம்: குண்டடம், உப்பாறு அணை சாலையில், தனியார் பள்ளி உள்ளது. பள்ளி நிர்வாகி நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். அப்போது பள்ளியின் கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்த போது, டேபிள் லாக்கரில் வைத்திருந்த, 12 ஆயிரத்து, 500 ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. மேலும் 'சிசிடிவி' கேமரா பதிவு இயந்திரத்தையும் காணவில்லை. இதுகுறித்த புகாரின்படி குண்டடம் போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போக்சோவில் கொத்தனார் கைதுதாராபுரம்: தாராபுரத்தை அடுத்த தேர்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார், 38; கொத்தனார். திருமணமாகி குழந்தைகள் உள்ளன. அவருடன் வேலை செய்யும், விதவை பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த பெண்ணின், 17 வயது மகளுக்கு சமீபத்தில் வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில், கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது, சிவகுமார் பெயரை தெரிவித்துள்ளார். தாய் புகாரின்படி தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். உண்மையை ஒப்புக் கொண்டதால், போக்சோ சட்டத்தில் கைது செய்து, திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
துாய்மை தொழிலாளி வீட்டில்ரூ.௧ லட்சம், நகை திருட்டு
அந்தியூர்: அந்தியூர், சீப்பர் காலனியை சேர்ந்தவர் புஷ்பா, 55; அந்தியூர் டவுன் பஞ்., துாய்மை பணியாளர். நேற்று முன்தினம் திருச்செந்துார் கோவிலுக்கு சென்றவர், நேற்று நள்ளிரவில் வீடு திரும்பினார். வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த, 1.10 லட்சம் ரூபாய், ஒரு பவுன் பிரேஸ்லெட் திருட்டு போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர் புகாரின்படி அந்தியூர் போலீசார், களவாணியை தேடி வருகின்றனர்.
சுமை துாக்குவோர் சங்கம் சார்பில் மே தின ஊர்வலம்
ஈரோடு-
ஈரோடு மாவட்ட சுமை துாக்குவோர் மத்திய சங்கம் சார்பில், மே தின விழா ஊர்வலம், ஈரோடு வ.உ.சி., பூங்காவில் இருந்து நேற்று நடந்தது. மத்திய சங்க தலைவர் விஜயகுமார், செயலாளர் மாது வரவேற்றனர். மறைந்த சங்க உறுப்பினர்களின் எட்டு பேரின் குடும்பங்களுக்கு தலா, 10,000 ரூபாய் நிதியுதவியை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கி பேசினார். ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் ராமலிங்கம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சத்தி சாலை, மணிக்கூண்டு சாலை வழியாக பன்னீர்செல்வம் பூங்காவில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, சிவசுப்பிரமணி, முன்னாள் மேயர் மல்லிகா, பகுதி செயலாளர்கள் ஜெயராஜ், ராமசாமி, பழனிசாமி, கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

