ADDED : ஜூலை 01, 2024 03:51 AM
தமிழ் மாநில விவசாய
தொழிலாளர் சங்க கூட்டம்
சத்தியமங்கலம்: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின், சத்தி தெற்கு ஒன்றியம், உக்கரம் ஊராட்சி அளவிலான கூட்டம், செயலாளர் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் மகேந்திரன் கலந்து கொண்டார். நுாறு நாள் வேலை திட்டத்தில், ஊராட்சிகளில் மனு கொடுத்த அனைவருக்கும் வேலை தரவேண்டும்.
இல்லையேல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சத்தி தாசில்தாரிடம் மனு கொடுக்க தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில், 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பவானிசாகர் நீர்மட்டம்
5 நாளில் 7 அடி உயர்வு
புன்செய்புளியம்பட்டி,: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம் பில்லுார் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீரும் பவானிசாகர் அணைக்கு வருகிறது. நேற்று மாலை, 4,267 கன அடி நீர் வரத்தானது. இதனால் அணை நீர்மட்டம், 65 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த ஐந்து நாட்களில், 7 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
'சரக்கு' சிக்கியது;
ஆசாமி ஓட்டம்
தாளவாடி-
கர்நாடக மது பதுக்கி விற்பதாக வந்த தகவலின்படி, தாளவாடி போலீசார், காமையன்புரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெங்கட்ராஜ், 40, வீட்டில், ௬௫ பாக்கெட் கர்நாடக மாநில மதுவை பறிமுதல் செய்தனர். ஆனால், வெங்கட்ராஜை போலீசார் பிடிக்கவில்லை. தப்பி ஓடி விட்டதால் அவரை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.