ADDED : மார் 18, 2024 03:05 AM
காங்கேயம் இன மாடுகள்
ரூ.7லட்சத்துக்கு விற்பனை
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 38 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 62 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 20 கால்நடைகள், ஏழு லட்சம் ரூபாய்க்கு விற்றன.
அங்காள பரமேஸ்வரி
கோவிலில் குண்டம் விழா
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கீரக்கார வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா கடந்த, 8ம் தேதி இரவு தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீ மிதி விழா நேற்று காலை நடந்தது. கோவில் பூசாரி முதலில் இறங்கினார். இதன் பிறகு காப்பு கட்டி விரதம் இருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் மாவிளக்கு பூஜை, இரவில் முத்து பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. இன்று காலை மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
பா.ஜ., ஆலோசனை கூட்டம்
தாராபுரம்: பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக, தாராபுரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், நகர தலைவர் சதீஷ் தலைமையில், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நகர பொது செயலாளர்கள் செல்வன், விவேகானந்தன் முன்னிலை வகித்தனர். பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்பட, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பூத் கமிட்டியை அடிப்படையாக வைத்து இதுவரை செய்த பணிகளை, வாக்குகளாக மாற்றும் நேரம் வந்து விட்டது. நமது தொகுதியில் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை நரேந்திர மோடியாகவே கருதி, தேர்தல் பணி செய்து வெற்றி பெறச் செய்ய நிர்வாகிகள் வலியுறுத்தினர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகி ராஜா கோவிந்தசாமி, இளைஞரணி தலைவர் வினித் உள்பட பலர்
பங்கேற்றனர்.
பெங்களூரு - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்
திருப்பூர்-
பயணிகள் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம், கொச்சுவேலிக்கு சனிக்கிழமைகளில் (மார்ச், 23 மற்றும் 30) சிறப்பு ரயில் (எண்:06555) இயக்கப்படும். இரவு, 11:55க்கு புறப்படும் ரயில், மறுநாள் இரவு, 7:40 மணிக்கு கொச்சுவேலி வந்தடையும். மறுமார்க்கமாக திங்கள் தோறும் (மார்ச், 24 மற்றும் 31) இரவு, 10:00க்கு கொச்சுவேலியில் புறப்படும் ரயில் (எண்:06556) மறுநாள் மாலை, 4:30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோட்டில் நின்று செல்லுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

