ADDED : மார் 27, 2024 03:51 PM
நேற்று 9 பேர் வேட்பு மனுத்தாக்கல்
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட நேற்று, 9 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கார்மேகன், மனுத்தாக்கல் செய்தார். பெருந்துறை தாலுகா முள்ளம்பட்டி, அலமேடு பகுதி ஈஸ்வரன், 38, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக மனுதாக்கல் செய்தார்.
நமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ஆர்.எஸ்.சாலை, அம்மன் நகரை சேர்ந்த குமார், 40, அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியை சேர்ந்த தமிழக உழைக்கும் மக்கள் கட்சி வேட்பாளராக மனுதாக்கல் செய்தார்.
இதில்லாமல் சுயேட்சைகளாக, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், வாய்க்கால் ரோடு சபரிநாதன், 40; பள்ளிபாளையம் ஆண்டிக்காடு அமிர்தலிங்கம், 52; நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளராக வெள்ளகோவில், நாகம்மநாய்க்கன்பட்டி சிவானந்தம், 36; திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேவராயன் பாளையம் தனலட்சுமி, 35; ஈரோடு மாவட்டம் சிவகிரி, காந்திஜி சாலையை சேர்ந்த ரவிசந்திரன் மனுத்தாக்கல் செய்தார். மொத்தம் ஒன்பது மனுவுடன், நேற்று முன்தினம் வரை, 16 மனு என, 25 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.1.92 கோடி ரூபாய் பறிமுதல்
ஈரோடு: ஈரோடு லோக்சபா தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் பறக்கும் படையினர், ஈரோடு கிழக்கில் நேற்று, காளை மாட்டு சிலை அருகே வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக வந்த கவுதம் என்பவரிடம், 55,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
நேற்று அதிகாலை, ஈரோடு காந்திஜி சாலையில், சலாவுதீன் என்பவரிடம், 75,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். நேற்று வரை, 1 கோடியே, 92 லட்சத்து, 78,895 ரூபாயை பறக்கும் படையினர் கைப்பற்றி உள்ளனர். உரிய ஆவணங்களை காண்பித்ததால், 1 கோடியே, 6 லட்சத்து, 34,855 ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். மீதி, 86 லட்சத்து, 44,040 ரூபாயை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ஈரோடு, வில்லரசம்பட்டி நாலு ரோட்டில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் சிவகுமார் தலைமையிலான குழுவினர், பாரம் ஏற்றி வந்த டாடா ஏஸ் ஆட்டோவை தடுத்து பரிசோதித்தனர். அதே பகுதியில் ஒரு ரிசார்ட்டில் நடக்கும் கூட்டத்துக்காக, சில்வர் பாத்திரம் கொண்ட கிப்ட் பாக்ஸ்கள், 45ஐ பறிமுதல் செய்து, ஆர்.டி.ஓ., சதீஸ்குமாரிடம் ஒப்படைத்தனர்.
ஓட்டு சதவீதம் குறைவான பகுதிகளில் விழிப்புணர்வு
ஈரோடு: கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க, தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி, மக்கள் சந்திப்பு, ராட்சத பலுான் பறக்க விடுதல் ஆகிய பணிகளில், ஈரோடு மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பி.பெ.அக்ரஹாரம், ரயில்வே காலனி, குமலன்குட்டை, சம்பத் நகர், எஸ்.கே.சி., சாலை என, 13 ஓட்டுச்சாவடிகளில் ஒட்டுப்பதிவு குறைந்தது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, தேர்தல் பிரிவு அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர் உள்ளார்களா என்பதை உறுதி செய்கின்றனர். அவர்களிடம், கட்டாயமாக ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். வேறு பகுதியில் ஓட்டு இருந்தாலும், இங்கு மாற்றி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என் உறுதி கூறுகின்றனர்.
ரூ.64,000 பறிமுதல்
அந்தியூர்: அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணை அருகே, தேர்தல் பறக்கும் படையினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த பிக்-அப் தோஸ்த் வாகனத்தில் ராஜேஷ் நாயக், 36, வந்தார். அவரிடம், 64,900 ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஊர்வலமாக சென்றதால் வேட்பாளர் மீது வழக்கு
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கார்மேகன் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று இவர் மனுத்தாக்கல் செய்தார். இதற்காக, ௬௦ ஆண்கள், ஐந்து பெண்களுடன், அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து, ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார். தேர்தல் பறக்கும் படையினர், அவரை தடுத்து, நடத்தை விதிமுறை என்று அறிவுறுத்தினர். ஆனாலும் அதை மீறி சென்றார். இதையடுத்து பறக்கும் படையினர் அளித்த புகாரின்படி, கார்மேகன் மீது அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

