ADDED : ஏப் 17, 2024 11:49 AM
302 மதுபாட்டில் 2 நாளில் பறிமுதல்
ஈரோடு: ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி., சண்முகம் தலைமையிலான போலீசார், நேற்று காலை மலையம்பாளையம் வேலப்பம்பாளையத்தில் சோதனை நடத்தினர். இதில் கொடுமுடி வேலநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆனந்தனிடம், 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். இதே போல் மொடக்குறிச்சி, சின்னம்மாபுரத்தில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமியிடம், 60 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் கைது செய்தனர்.
நேற்று முன் தினம் ஈரோடு, கோபி மதுவிலக்கு போலீசார் சோதனையில் ஏழு கர்நாடகா மாநில மது பாட்டில் உள்ளிட்ட, 172 மதுபாட்டில் கைப்பற்றப்பட்டு, 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஓடாநிலையில் பாதுகாப்பு
ஈரோடு: தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா, அரச்சலுார் அருகே ஓடாநிலையில் இன்று கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஓடாநிலையில் இன்று காலை முதல் விழா நிறைவு பெறும் வரை, 70 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்; 4 பேர் கைது
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி வலசு, மாருதி காம்ப்ளக்ஸை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 25; முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட்-1 அணைக்கட்டு அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். மணல் மேட்டை சேர்ந்த அஜித்குமார், 23, பிரேம்நாத், 23, சிபிராஜ், 22, மற்றும் சஞ்சய், 19 ஆகியோர் போட்டோ எடுத்து கொண்டிருந்தனர்.
அவர்களிடம் சந்தோஷ்குமார், சற்று தள்ளி சென்று போட்டோ எடுக்கும்படி கூறியதால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நால்வரும் தகாத வார்த்தை பேசி, கட்டை, கற்களால் சந்தோஷ் குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். அவரது புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து அஜித்குமார் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர்.
2 குழந்தையுடன் மனைவி மாயம்; கணவன் புகார்
கோபி: கோபி, மேட்டுவலவு அருகே சுப்பண்ணன் வீதியை சேர்ந்தவர் இளங்கோவன், 40, தனியார் கம்பெனி தொழிலாளி; இவரின் மனைவி பிரதீபா, 30; தம்பதிக்கு ஏழு வயதில் பெண், மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பிரதீபா இரு குழந்தைகளுடன் மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இளங்கோவன் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு
கோபி: கோபி அருகே வெங்கட்ராமன் வீதியில், 60 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆண் உடல் நேற்று கிடந்தது. கோபி போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வீரபாண்டி வி.ஏ.ஓ., சக்திவேல் புகாரின்படி விசாரிக்கின்றனர்.
தொழிலாளி தற்கொலை
கோபி: கவுந்தப்பாடி அருகே பொம்மன்பட்டி சாலையை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 38. மூட்டை துாக்கும் தொழிலாளி; மது போதைக்கு அடிமையாகி முறையாக வேலைக்கு செல்லாமலிருந்தார். நேற்று முன்தினம் வேலை தேடி சென்றவருக்கு வேலை கிடைக்காததால், செல்பாஸ் மாத்திரை தின்று விட்டார். வாந்தி எடுத்த பிறகே விபரம் தெரிய வந்தது. மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மனைவி புவனேஸ்வரி புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
காட்டூரில் பொங்கல் விழா
சென்னிமலை: சென்னிமலை பேரூராட்சி காட்டூரில் பழமையான செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் பொங்கல் விழா நடந்தது. முன்னதாக பக்தர்கள் காங்கேயம் அருகே மடவிளாகம் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் செல்வ விநாயகர், செல்லாண்டியம்மனுக்கு பொங்கல் வைத்தனர். தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

