/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பா.ஜ., நிர்வாகியின் நாய் மர்ம சாவு தோட்டத்து வீட்டில் எஸ்.பி., விசாரணை
/
பா.ஜ., நிர்வாகியின் நாய் மர்ம சாவு தோட்டத்து வீட்டில் எஸ்.பி., விசாரணை
பா.ஜ., நிர்வாகியின் நாய் மர்ம சாவு தோட்டத்து வீட்டில் எஸ்.பி., விசாரணை
பா.ஜ., நிர்வாகியின் நாய் மர்ம சாவு தோட்டத்து வீட்டில் எஸ்.பி., விசாரணை
ADDED : மே 15, 2025 02:48 AM
சென்னிமலை:சென்னிமலை அருகே, பா.ஜ., நிர்வாகி வீட்டு நாய் இறந்ததையடுத்து, எஸ்.பி., நேரில் விசாரணை நடத்தினார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே மருதுறை கிராமம், பாரதிபுரத்தில் 2020ல் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். 2021ல் சாவடிபாளையத்தில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியர் கொலை செய்யப்பட்டனர்.
இதே பாணியில் 2023ல், சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சியில் உப்பிலிபாளையம் குட்டக்காடு தோட்டத்தில் முதியவர் கொலை செய்யப்பட்டார்.
சென்னிமலை முருங்கத்தொழுவு மணிமலை அருகே, 2024ல் தம்பதியர் கொலை செய்யப்பட்டனர்.
சில மாதங்களுக்கு முன், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள அவிநாசி பாளையத்தில், மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன், ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே ராமசாமி-பாக்கியம் தம்பதியினர் கொலை செய்யப்பட்டனர்.
கொலை செய்யப்பட்டவர்களின் சிலரது வீடுகளில், சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், வளர்பு நாய் இறந்து கிடந்தது. கொலையாளிகள் முன்னதாக வீட்டு நாய்களை கொன்று விட்டு, அதன் பின்னர் கொலை, கொள்ளையை அரங்கேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் போலீசார் நாய்கள் இறந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கூறியிருந்தனர்.
இறந்து கிடந்த வளர்ப்பு நாய்
ஈரோடு மாவட்டம், சென்னிமலை தெற்கு ஒன்றிய பா.ஜ., செயலர் கலைவாணி பாஸ்கர். இவர் சென்னிமலை யூனியன், எல்லை கிராமம் ஊராட்சி, -சொக்கநாதபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில், கணவருடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வீட்டின் அருகில், இவர் வளர்த்து வந்த வளர்ப்பு நாய்கள் எதையோ கண்டு பயந்து குறைத்துள்ளன.
வெளியே வந்து பார்க்க பயந்த இவர்கள், அருகில் இருப்பவர்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவிக்க தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், மொபைல் சிக்னல் கிடைக்கவில்லை.
இரவு முழுதும் பயத்துடன் கலைவாணி, கணவர் பாஸ்கர் இருவரும் வீட்டில் பொழுதை கழித்துள்ளனர்.
காலையில் பார்த்தபோது, இவர் வளர்த்து வந்த நான்கு வளர்ப்பு நாய்களில், ஒன்று இறந்து கிடந்துள்ளது. மற்றொரு நாய் சோர்வாக இருந்துள்ளது. மற்ற இரண்டு நாய்களை காணவில்லை. மேலும், அவர் வீட்டின் அருகில் வசிக்கும் பழனிசாமி என்பவரது இரு நாய்களும் காணவில்லை.
போலீசார் முகாம்
இது கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்கலாம் என அச்சமடைந்த கலைவாணி குடும்பத்தினர், உடனடியாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சென்னிமலை உப்பிலிபாளையம், சிவகிரி, சேமலை கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்களில், முதலில் கொள்ளையர்கள் வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்களைத்தான் கொன்றுள்ளனர். எனவே, இச்சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
நாய் இறந்தது குறித்த தகவல் கிடைத்ததும், ஈரோடு மாவட்ட எஸ்.பி., சுஜாதா, கலைவாணி பாஸ்கர் வீட்டுக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், ''இறந்த நாயின் உடலில் ரத்த காயங்கள் எதுவும் இல்லை.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, நாயின் வயிற்றுக்குள் கோழி எலும்பு இருந்தது,'' என, தெரிவித்தார்.
சென்னிமலை போலீசார், இப்பகுதியில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்.