/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சியில் உபரி பட்ஜெட் தாக்கல்
/
மாநகராட்சியில் உபரி பட்ஜெட் தாக்கல்
ADDED : மார் 02, 2024 03:32 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியின் நடப்பாண்டு பட்ஜெட், உபரி பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில், 2024--25ம் ஆண்டு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். பட்ஜெட் நகல் பெட்டியை நிதிக்குழு தலைவர் மல்லிகா நடராஜன், உறுப்பினர்களுடன் கொண்டு வந்து மேயரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து மேயர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: 2024-- 25ம் நிதியாண்டில், சொத்து வரி மூலம், ௭0.18 கோடி வருவாய் கிடைக்கும். இதிலிருந்து வருவாய் நிதிக்கு, 30.50 கோடி; குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் நிதிக்கு, 27.47 கோடி; ஆரம்ப கல்வி நிதிக்கு, 12.21 கோடியும் ஒதுக்கப்படும்.
மாநகர எல்லைக்குள் இயங்கிவரும் தனியார் மற்றும் வியாபார ஸ்தாபனங்கள் மூலமாகவும், அரசு அலுவலக பணியாளர்கள் மூலமாகவும், தொழில்வரியாக, 7.20 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். பதிவுத்துறை மூலமாக சொத்து மாற்றங்களுக்குரிய வரி, ௮ கோடி ரூபாய்; கேளிக்கை வரியாக, 3 கோடி ரூபாயும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்
படுகிறது.
மாநகராட்சி வணிக வளாகம், மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், வாகன நிறுத்தம் மற்றும் சிறு குத்தகையினங்கள் மூலம், 11.94 கோடி வருவாய் கிடைக்கும்.
ஒப்பந்ததாரர் உரிமம் பெற்ற குழாய் பொருத்துனர்கள், மாநகராட்சியில் பதிவு பெற்ற கட்டட பொறியாளர் பதிவு கட்டணம், தொழில் உரிம கட்டணம், குடிநீர் பாதாள சாக்கடை கட்டணம் மூலம், 63.10 கோடி வருவாய் கிடைக்கும். மாநகராட்சி வேலை பணிகளுக்காக மானியங்கள் மற்றும் கடன்கள் மூலம், 387.80 கோடி வரப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
மாநகராட்சி பணியாளர் ஊதிய செலவினத்துக்கு, 95.02 கோடி; ஓய்வூதிய பயன்களுக்காக, 25.84 கோடி; நிர்வாக செலவினத்துக்கு, 6.27 கோடி செலவாகும். வருவாய், குடிநீர் வினியோகம் மற்றும் கல்வி நிதிகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் செலவினங்களுக்காக, 78.62 கோடி ரூபாய் செலவாகும்.
மாநகராட்சியில் வேலை பணிகளுக்காக பெறப்பட்ட கடன்களுக்கு, அசல் மற்றும் வட்டி செலவினமாக, 13.47 கோடி செலவாகும். மாநகராட்சியின் வருவாய், குடிநீர் வினியோகம் மற்றும் கல்வி நிதிகளில் பொதுநிதி மற்றும் மானியங்கள் மூலமாக, மூலதன வேலை பணிகளுக்காக, 414.98 கோடி ரூபாய் செலவாகும். நிதி உபரி, 3.33 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி மாநகராட்சி மொத்த வருவாய், 650 கோடி; செலவினம், 647 கோடி; உபரி நிதியாக, 3.33 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு
பட்ஜெட் திருப்தியளிக்கவில்லை என்று கூறி,
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

