பட்டியலினத்தவர் காலில் விழுந்த விவகாரம் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை
பட்டியலினத்தவர் காலில் விழுந்த விவகாரம் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை
ADDED : அக் 18, 2026 06:30 AM
பெருந்துறை:பெருந்துறை
ஒன்றியம் திங்களூர் அருகே பெரும்பாளி கிராமத்தில், பட்டியிலனத்தை
சேர்ந்த ஒருவர் இறந்தார். அவரது உடலை மயானத்தில் அடக்கம் செய்யும்
விவகாரத்தில், மற்றொரு தரப்பினர் காலில், பட்டியலினத்தை
சேர்ந்தவர் விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான
பேச்சுவார்த்தை பெருந்துறை தாலுகா அலுவலகத்தில், தாசில்தார்
செல்வகுமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் இருதரப்பினரும்
கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பட்டியலினத்தவர் தரப்பில்
கூறுகையில், 'கடந்த பத்து நாட்களாக யாரும் வேலைக்கு செல்லவில்லை.
இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது
குறித்து
கலெக்டர், எஸ்.பி., ஆர்.டி.ஓ., தாசில்தார் என யாரும் நேரில் வந்து
விசாரிக்கவில்லை. பாதிக்கப்பட்ட எங்களின் வாழ்வாதாரத்துக்கு
வழிவகை செய்யவேண்டும்' என்றனர்.
மற்றொரு தரப்பினர் பேசுகையில்,
'எங்களுக்கும் பெரும்பாளி கிராம மக்களுக்கும், எந்த ஒரு பிரச்னையும்
இல்லை. இடையில் வந்த மூன்றாவது நபரான அரசியல் கட்சிக்காரர்களின்
தலையீட்டால், தேவையில்லாமல் வதந்தி பரப்பப்படுகிறது. தற்போதும்
பெரும்பாளி மக்கள், எங்கள் தோட்டங்களில்தான் வேலை செய்கின்றனர்.
காலில் விழுந்ததாக சொல்லப்படும் பெண்ணும், எங்கள் தோட்டத்தில் ஒன்றரை
வருடங்களாக தற்போதும் வேலை செய்கிறார். சம்பள பிரச்னை, மழை
இல்லாததால் தொடர்ச்சியாக எங்களால் வேலை தர முடியவில்லை'.
மேலும்,
'மயான பிரச்னை சம்பந்தமாக எங்களுக்கு தாசில்தார் வழங்கிய
குறிப்பாணை கிடைக்காத காரணத்தினால்தான், சம்பவத்தன்று அங்கு சென்று
குறிப்பாணையை கேட்டோம். அதை காட்டியவுடன் ஐந்து நிமிடத்தில் அந்த
இடத்தை விட்டு சென்று விட்டோம். அவர்களும் உடலை அடக்கம் செய்து
விட்டனர்'.
'மூன்றாவது நபர்களான கட்சியினர் உள்ளே புகுந்து
தேவையின்றி சமூக வலைதளங்களில் எங்களது ஜாதியை தவறாக சித்தரித்து
பதிவிடுகின்றனர். தற்போது அந்த மயானம் அனைவருக்கும் பொதுவானது
என்று புரிந்து கொண்டோம். இனிவரும் காலங்களில் எவ்வித பிரச்னையும்
செய்ய மாட்டோம்' என்று உறுதி அளித்தனர்.
