ADDED : செப் 09, 2026 07:15 AM
சென்னிமலை:சென்னிமலை
உள்வட்டத்துக்கு உட்பட்ட முருங்கத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள
மணிமலை கரடு மற்றும் குட்டிக்கரடு பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட
வனப்பகுதியாக அறிவிப்பதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டு
வருகின்றன.
இந்த பகுதியில் அரசு நத்தம் நிலமாக உள்ள மணிமலைகரடு
மற்றும் குட்டிக்கரடு வனப்பகுதி களில் புள்ளி மான், உடும்பு,
மயில், முயல் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், அரிய வகை
பறவையினங்களும் அதிகம் வசிக்கின்றன.
இதனால் இப்பகுதியில்
சட்ட விரோத அல்லது குற்ற நடவடிக்கை நடைபெறாமல் தடுக்கவும், வன
நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தவிர்க்கவும் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே இப்பகுதிகளை
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க உரிய முன்மொழிவை அனுப்பி
வைக்க ஈரோடு ஆர்.டி.ஓ., அறிவுறுத்தியிருந்தார். இதை தொடர்ந்து
முன்மொழிவு அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க, நில வருவாய்
ஆய்வாளருக்கு, பெருந்துறை தாசில்தார் செல்வக்குமார்
உத்தரவிட்டுள்ளார்.
