/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குளத்தில் 'கொட்டிய' மக்கள் வரிப்பணம்!
/
குளத்தில் 'கொட்டிய' மக்கள் வரிப்பணம்!
ADDED : ஜன 25, 2024 10:27 AM
திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஊத்துக்குளி ஒன்றியத்தின் எல்லையில், நல்லாற்றின் கழிமுக துவாரமாக அமைந்துள்ளது, நஞ்சராயன்குளம்; இக்குளம், 440 ஏக்கர் என்று கூறப்பட்ட நிலையில், 390 ஏக்கர் மட்டும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
குளத்தில், நல்லாற்றில் வரும் கழிவுநீர் தேங்கி, நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்பட்டது; குளத்தில் தங்கும் பறவைகளுக்கும் பல்வேறு பாதிப்பு ஏற்பட்டது. நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டி, நல்லாற்றில் வரும் கழிவுநீரை சுத்திகரித்த குளத்தில் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, பொதுப்பணித்துறை சார்பில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில், நஞ்சராயன் குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது.கடந்த, 2017 ல் பணிகள் முழுமை பெறாமல், இத்திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. மக்கள் வரிப்
பணத்தை குளத்துக்குள் கொட்டியது போல், பணிகள் ஒரு பைசாவுக்கு கூட பயனளிக்கவில்லை.
சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டில் இருந்தால், சுத்திகரிக்கப்பட்ட நல்ல தண்ணீர் குளத்தில் தேக்கப்படும்; கழிவுநீர், 'பேபி' வாய்க்கால் மூலமாக குளத்தில் சேராமல் வெளியேற்றப்பட்டது. அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் இக்குளம் தேர்வாகியுள்ள நிலையில், கழிவுநீரை சுத்திகரிக்காமல் சேமிப்பது பெரும் சீர்கேட்டை உருவாக்குமென, இயற்கை ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,' நஞ்சராயன் குளத்தில், சாயக்கழிவு உள்ளிட்ட கழிவுநீர் சேர்கிறது. சுத்திகரிப்பு மையம் சரிவர செயல்பட்டால், குளம் பாதுகாக்கப்படும். எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், குளத்தை ஆய்வு செய்து, பொதுப்பணித்துறையின் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தின் நிலையை கண்டறிய வேண்டும். வரும்நாட்களில், சுத்திகரிப்பு நிலையம் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.