/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தம்பிராட்டி அம்மன் கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற எதிர்ப்பு சர்வ கட்சியினர், பக்தர்கள் திரண்டதால் மீண்டும் பரபரப்பு
/
தம்பிராட்டி அம்மன் கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற எதிர்ப்பு சர்வ கட்சியினர், பக்தர்கள் திரண்டதால் மீண்டும் பரபரப்பு
தம்பிராட்டி அம்மன் கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற எதிர்ப்பு சர்வ கட்சியினர், பக்தர்கள் திரண்டதால் மீண்டும் பரபரப்பு
தம்பிராட்டி அம்மன் கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற எதிர்ப்பு சர்வ கட்சியினர், பக்தர்கள் திரண்டதால் மீண்டும் பரபரப்பு
ADDED : டிச 06, 2025 02:56 AM
சென்னிமலை: தம்பிராட்டி அம்மன் கோவில் நிர்வாகத்தை, அறநிலையத்துறை கைப்பற்ற எதிர்ப்பு தெரிவித்து, சர்வ கட்சியினர், பக்தர்கள் கோவிலில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை யூனியன், ஈங்கூரில் அமைந்துள்ளது மிக பழமையான தம்பிராட்டி அம்மன் கோவில். இக்கோவில் கொங்கு வேளாளர் சமூகத்தில் ஒரு பிரிவான ஈஞ்சன் குலத்தினரின் குல தெய்வ கோவிலாக உள்ளது. 2000 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வழி, வழியாக வழிபட்டு வருகின்றனர்.
இக்கோவிலை, இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கக் கோரி அதிகாரிகள் அனுப்பிய கடிதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில் வளாகத்தில் கடந்த நவ., 28ம் தேதி பக்தர்கள் திரண்டதால், அன்று அறநிலைய துறை அதிகாரிகள் வரவில்லை. இந்தசூழ்நிலையில் நேற்று கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்க கோரி அறநிலையத்துறை அதிகாரிகள், ஈரோடு மாவட்ட உதவி ஆணையர் சுகுமார், தக்கார் தனலட்சுமி ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். இத்தகவல் பரவியதை அடுத்து பக்தர்கள் திரண்டனர். மேலும், பெருந்துறை, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., ஜெயகுமார், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில், காங்., மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் உட்பட சர்வ கட்சி நிர்வாகிகளும் திரண்டனர். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
உதவி ஆணையர் சுகுமார் பேசுகையில், ''எங்கள் துறை, உங்கள் கோவில் நிர்வாகத்தை கேட்டு வரவில்லை. உங்கள் கோவிலுக்கு சொந்தமான ஒருவர், நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று வந்த நிலையில், நாங்கள் நீதிமன்ற உத்திரவை அமல் படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்,'' என்றார்.
கோவில் தற்போதைய கோவில் நிர்வாகிகள், ' இக்கோவில் நிர்வாகத்திலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட ஒருவர், தன்னிச்சையாக ஐகோர்ட்டில் வழக்கு போட்டு உத்தரவு பெற்றுள்ளார். அது எங்களுக்கு தெரியவில்லை. கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற, இந்து சமய அறநிலையத் துறை அவசர நடவடிக்கையில் இறங்கி, தக்கார் நியமித்து செயல்படுவது கூடாது. எங்களுக்கு போதிய அவகாசம் தர வேண்டும். நாங்கள் நீதிமன்றம் சென்று மறு உத்தரவு வாங்கும் வரை நடவடிக்கை கூடாது' என வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும், கோவிலில் திரண்ட பக்தர்களுக்கு ஆதரவாக, சர்வ கட்சி நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதிகாரிகள் செய்வதறியாது திரும்பி சென்றனர்.

