அந்தியூரில் போட்டி போராட்டம் நடத்திய குடிமகன்களால் பதற்றம்
அந்தியூரில் போட்டி போராட்டம் நடத்திய குடிமகன்களால் பதற்றம்
UPDATED : ஜூன் 25, 2026 07:58 AM
ADDED : ஜூன் 25, 2026 04:29 AM

அந்தியூர்:அந்தியூரில்,
ஜனநாயக மாதர் சங்கத்தினரின் பூட்டு போடும் போராட்டம் நடந்து
கொண்டிருந்த போது, 20க்கும் மேற்பட்ட குடிமகன்கள் கடையை
மூடக்கூடாது எனக்கூறி, போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
ஈரோடு
மாவட்டம், அந்தியூரிலிருந்து புதுக்காடு செல்லும் வழியில்,டாஸ்மாக்
கடை உள்ளது. மது குடிக்க வருபர்களால், குடியிருப்புவாசிகளுக்கு
தொல்லை ஏற்படுகிறது. இரவு நேரத்தில் சாலையின் இருபுறங்களில்,
நின்றபடி குடித்து கும்மாளமடிக்கும் குடிமகன்களால், அவ்வழியில்
பெண்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இக்கடையை அகற்றக்கோரி கடந்த,
1ம் தேதி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டமும், 9ம் தேதி
காத்திருப்பு போராட்டமும் நடந்தது. அப்போது, மாதர்
சங்கத்தினருடன் பேசிய அதிகாரிகள், ஒரு வாரத்தில் கடையை மாற்றி
விடுகிறோம் என உறுதியளித்தனர். ஆனால் கடையை மாற்றாமல் இருந்தனர்.
![]() |
பவானி
டி.எஸ்.பி., ஜெய்சிங், அந்தியூர் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, டாஸ்மாக்
துணை மேலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர், மாதர் சங்கத்தினருடன்
பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, 20க்கும்
மேற்பட்ட குடிமகன்கள் திரண்டு, டாஸ்மாக் கடையை அகற்றக் கூடாது
எனக்கூறி, கையில் பதாகைகளுடன் போட்டி போராட்டம் நடத்த வந்தனர்.
இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து
நிறுத்தி திரும்பி செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள், போலீசாரின்
காலில் விழுந்து, கடையை மூட வேண்டாம் என கெஞ்சினர். இருப்பினும்,
அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
கடையை அகற்றாமலிருக்க,
போட்டி போராட்டம் நடத்த, குடிமகன்களை டாஸ்மாக் சூப்பர்வைசர்கள்
துாண்டி விட்டுள்ளனர் என மாதர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், புதுக்காடு செல்லும் வழியில்,
அதே ரோட்டில், 500 அடி துாரத்தில் புதிய கடை அமைக்க கட்டடம்
கட்டியதும், மாற்றிக் கொள்கிறோம் என உத்தரவாதம் அளித்தனர். இதற்கு,
25 நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர். அதன் பின், 2 மணி நேர
போராட்டத்தை கைவிட்டு மாதர் சங்கத்தினர் கலைந்து சென்றனர்.

