/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் அத்துமீறிய ஜவுளி கடைகள்; கனி மார்க்கெட்டில் சரிந்த தீபாவளி விற்பனை
/
ஈரோட்டில் அத்துமீறிய ஜவுளி கடைகள்; கனி மார்க்கெட்டில் சரிந்த தீபாவளி விற்பனை
ஈரோட்டில் அத்துமீறிய ஜவுளி கடைகள்; கனி மார்க்கெட்டில் சரிந்த தீபாவளி விற்பனை
ஈரோட்டில் அத்துமீறிய ஜவுளி கடைகள்; கனி மார்க்கெட்டில் சரிந்த தீபாவளி விற்பனை
ADDED : நவ 06, 2024 06:50 AM
ஈரோடு: ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில், திங்கள் இரவு முதல் செவ்வாய் இரவு வரை, ஜவுளி சந்தை விற்பனை நடக்கும். தீபாவளிக்கு பின் நேற்று நடந்த சந்தையில் விற்பனை குறைவாகவே நடந்தது.
இதுபற்றி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த செல்வ ராஜ் கூறியதாவது: கடந்த, 31ல் தீபாவளி பண்டிகை கொண்டாடிய நிலையில், அதற்கு முந்தைய திங்கள் இரவு முதல் செவ்வாய் இரவு வரை நடந்த கனி மார்க்கெட் மற்றும் அதை சுற்றிய பகுதி ஜவுளி சந்தையில் ஓரளவு விற்பனை நடந்தது. இருப்பினும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பன்னீர்செல்வம் பூங்கா முதல் மணிக்கூண்டு சாலை, ஈஸ்வரன் கோவில் வீதிகள், டி.வி.எஸ்., வீதி, காந்திஜி சாலை, பனியன் மார்க்கெட் பகுதியில் சாலை ஓரங்கள், சாலையின் நடுவிலும் ஆக்கிரமிப்பு கடைகளை அமைத்து ஜவுளி விற்பனை செய்தனர். இதனால் கனி மார்க்கெட் உட்பட நிரந்தர கடைகளுக்குள் மக்கள் வராமல் ஜவுளி விற்பனை சரிந்தது.
பல ஆயிரம் ரூபாய் முதல், சில லட்சம் ரூபாய் வரை வாடகை செலுத்தியும், பல லட்சம் ரூபாய்க்கு தீபாவளிக்கான ஜவுளிகளை வாங்கி குவித்த கடைக்காரர்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளோம். வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் மாநகராட்சி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று (நேற்று) நடந்த சந்தையில், கனி மார்க்கெட் நிரந்தர கடைகள் தவிர, வாரச்சந்தை கடைகள் குறைவாகவே போடப்பட்டிருந்தன. அங்கும் சில்லரை விற்பனை மட்டும், 20 சதவீதத்துக்குள் நடந்தது. மொத்த விற்பனை சுத்தமாக இல்லை. இவ்வாறு கூறினார்.

