/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவிரி கரையில் தை அமாவாசை வழிபாடு அமோகம்
/
காவிரி கரையில் தை அமாவாசை வழிபாடு அமோகம்
ADDED : பிப் 10, 2024 07:05 AM
தை மாத அவாசையான நேற்று, ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையில், ஆயிரக்கணக்கான மக்கள், முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கருங்கல்பாளையத்தில் ஆகாயத்தாமரை செடியில் காவிரி ஆறு மூழ்கியதால், ஆற்றைத்தேடி மக்கள் அவதிப்
பட்டனர்.
ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தில், மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆறு, கடற்கரை, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படையலிட்டு பித்ரு பூஜை செய்வது
வழக்கம்.
அந்த வகையில் தை அமாவாசை தினமான நேற்று, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரைக்கு, அதிகாலை முதலே நுாற்றுக்கணக்கான மக்கள் வரத் தொடங்கினர். முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
கூடுதுறையில்...-
பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் தந்து, பரிகார பூஜை செய்தனர். இதனால் கூடுதுறை வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்தது.
கொடுமுடியில்...
கொடுமுடி காவிரி ஆற்றுக்கு, அதிகாலை முதலே பக்தர்கள், மக்கள் வரத் தொடங்கினர். பிதுர் தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து, காவிரியில் புனித நீராடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் பரிகாரம் செய்ய ஏதுவாக, மகுடேஸ்வரர் கோவில் முன்புறம் ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
கோவில்களில் குவிந்த கூட்டம்தை அமாவாசையை ஒட்டி, ஈரோடு மாநகரில் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்துாரி அரங்கநாதர் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், சோழீங்கஸ்வரர் கோவில், திண்டல் வேலாயுதசுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் நேற்று நடந்தது.
கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரே திருக்குண்டத்தில், பெண் பக்தர்கள் தீபமேற்றி, உப்பு கொட்டி வழிபட்டனர். இதேபோல் மொடச்சூர் தான்தோன்றியம்மன், கோபி சாரதா மாரியம்மன், பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னிமலையில் மலை மீது உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. முருக பெருமானுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டனர். மக்கள் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான பஸ்கள் இயக்கப்பட்டன.
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி, கோபி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர்.
-நிருபர் குழு-