/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அன்னுார் விழாவை புறக்கணிக்கவில்லை; செங்கோட்டையன் பேட்டி
/
அன்னுார் விழாவை புறக்கணிக்கவில்லை; செங்கோட்டையன் பேட்டி
அன்னுார் விழாவை புறக்கணிக்கவில்லை; செங்கோட்டையன் பேட்டி
அன்னுார் விழாவை புறக்கணிக்கவில்லை; செங்கோட்டையன் பேட்டி
ADDED : பிப் 10, 2025 11:47 AM

கோபி; ''நான் அன்னுாரில் நடந்த பாராட்டு விழாவுக்கு செல்லவில்லையே தவிர புறக்கணிக்கவில்லை'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், கோபி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன் கூறினார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, செயல்படுத்திய முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.க்கு, அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், கோவை மாவட்டம், அன்னுார் அருகே கஞ்சப்பள்ளியில், பாராட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இ.பி.எஸ்., கலந்து கொண்ட விழாவில், முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆனால், அ.தி.மு.க., முன்னாள் மூத்த அமைச்சரும், கோபி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதனால் அவர் கூட்டத்தை புறக்கணித்ததாக, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 39.90 லட்சம் ரூபாய் மதிப்பில், விவசாய இடுபொருட்கள் கிடங்கு திறப்பு விழா நடந்தது. அப்போது கிடங்கை திறந்து வைத்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், கோபி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை ஏற்பாடு செய்திருந்த குழுவை சார்ந்தவர்கள், கடந்த மூன்று நாட்களுக்கு முன் என்னை சந்தித்தார்கள். அப்போது அவர்கள் என்னை சந்தித்தபோது, நான் அவர்களிடம் வேண்டுகொள் வைத்தேன். அதாவது, எங்களை உருவாக்கிய, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்கள் அந்த விழாவில் இடம்பெறவில்லை. என்னிடத்தில் கலந்து பேசியிருந்தால், அதை அவர்கள் கவனத்துக்கு தெரிவித்திருப்பேன். பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் வைக்கும்போது தான் எனது கவனத்துக்கு வந்தது. ஆகவே என்னை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் திருவுருவ படங்கள், அந்த விழாவில் இடம்பெறவில்லை. அதே நேரத்தில் இந்த திட்டத்தை கொண்டு வர, கடந்த, 2011ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 3.72 கோடி ரூபாய் நிதிகளை வழங்கினார். அப்போதை பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், அதை ஆய்வு செய்ய உத்தரவு வழங்கினார். இந்த திட்டத்தை துவங்கிய நேரத்தில், அவர்கள் அடித்தளமாக இருந்தார்கள். எனவே விழாவில் அந்த தலைவர்களின் படங்கள் இல்லை என்பதை, என்னை சந்தித்த குழுவினரின் கவனத்துக்கு எடுத்து கூறினேன். நான் அன்னுாரில் நடந்த பாராட்டு விழாவுக்கு செல்லவில்லையே தவிர புறக்கணிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முன்னாள் எம்.பி., சத்தியபாமா, கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.