/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிடப்பில் சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி 2 ஆண்டுக்கு முன் அடிக்கல் நாட்ட வைத்த செங்கலே சாட்சி
/
கிடப்பில் சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி 2 ஆண்டுக்கு முன் அடிக்கல் நாட்ட வைத்த செங்கலே சாட்சி
கிடப்பில் சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி 2 ஆண்டுக்கு முன் அடிக்கல் நாட்ட வைத்த செங்கலே சாட்சி
கிடப்பில் சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி 2 ஆண்டுக்கு முன் அடிக்கல் நாட்ட வைத்த செங்கலே சாட்சி
ADDED : நவ 23, 2025 12:56 AM
சென்னிமலை, சிப்காட்டில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, பூஜை போட்டதுடன் முடங்கியுள்ளது. இரண்டு ஆண்டாக ஒரு செங்கல் கூட வைக்காமல் (அடிக்கல் நாட்டியபோது செங்கல் வைத்துள்ளனர்) முடங்கியுள்ளதாக, சிப்காட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் குமுறல் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, பெருந்துறை ஒன்றியத்தில் செயல்படும் சிப்காட்டில், 2,700 ஏக்கர் பரப்பளவில், 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலை, நுாற்பாலைகள் என பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறன.
இந்த தொழிற்சாலைகளின் கழிவு நீர் நல்லா ஓடை வழியாக வெளியேற்றப்படுகிறது. பல தொழில் நிறுவனங்கள் சுத்திகரிக்காத கழிவுநீரை நிலத்தில் இறக்கி விடுவதாகவும், சிப்காட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர் புகார் கூறி வருகின்றனர். இதை உண்மையாக்கும் வகையில், சிப்காட்டை சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீரை ஆடு, மாடுகள் கூட குடிக்க தகுதியற்றது என குடிநீர் வடிகால் வாரியம் சான்று தந்துள்ளது. இப்பகுதி போர்வெல் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும் தடை விதித்துள்ளது.
கடந்த, 1996ல் தொடங்கப்பட்ட சிப்காட் நிறுவனம், தொடங்கிய புதிதில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியதால், நிலத்தடி நீரின் உப்புத்தன்மை, 25 ஆயிரம் டி.டி.எஸ்.,-க்கு மேல் போனது. எனவே கெட்டுப்போன நிலத்தடி நீரை தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர், டேங்கர் லாரிகளில் எடுத்துச் சென்று மறுசுழற்சி செய்து தொழிற்சாலைகளுக்கே மீண்டும் பயன்படுத்திக் கொள்ள அனுப்பி வைக்கின்றனர். இந்த முறையில் தண்ணீரை எடுத்து சுத்திகரிப்பதால் பெரும் பொருள் செலவு ஏற்படுகிறது.
இதன் காரணமாக வெகுவாக மாசுபட்டுள்ள சிப்காட் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து அதை மறுசுழற்சி செய்வதற்காக, 42 கோடி ரூபாய் செலவில் பொது சுத்திகரிப்பு நிலையம் (common effluent treatment plant) அமைக்க, 2023ல் துணை முதல்வர் உதயநிதி, அடிக்கல் நாட்டினார். இதற்காகும் செலவில், 50 சதவீதத்தை ஆலை நிர்வாகங்களும், மீதி தொகையை அரசும் ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பலமுறை டெண்டர் அறிவிப்பு வெளியிட்டும் பல்வேறு காரணங்களால் இறுதி செய்யப்படாமல் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான மதிப்பீட்டு தொகை தற்போது, ௧34 கோடியாக உயர்ந்து விட்டது. இரண்டு ஆண்டாகியும் பணி தொடங்காமல், அடிக்கல் நாட்டும்போது வைக்கப்பட்ட செங்கல், தற்போது இதற்கான கா(சா)ட்சி பொருளாக உள்ளது.
பணி தொடங்காதது குறித்து, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
திட்டத்துக்கான டெண்டர் எடுத்த நிறுவனம் திட்டப்பணியில் மாற்றம் செய்ய முயற்சித்ததால், சிப்காட் ஜவுளி பதனிடுவோர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு தரப்பிலும் திட்ட அறிக்கையில் மாற்றம் செய்யாமல் திட்டப்பணியை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளோம். இது தொடர்பாக அமைச்சர் தரப்பிலும், டெண்டர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் கட்டுமான பணி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினர்.
ஒரு நல்ல விஷயத்தை இரண்டு ஆண்டாக தொடங்காமலே இழுத்தடித்து வருவது எந்த வகையான மாடல்? என்பது, சிப்காட்டை சுற்றியுள்ள மக்களின் கேள்வியாக உள்ளது. கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட, ஒரு செங்கல் கூட வைக்கவில்லை என்று, ஒற்றை செங்கலை காட்டி உதயநிதி பிரசாரத்தில் கேள்வி எழுப்பினார். அதே உதயநிதி துணை முதல்வராகி, அவர் வைத்த செங்கல்தான், பொது சுத்திகரிப்பு நிலையம் முடங்கியதற்கான சாட்சியாகவும் உள்ளதாக, மக்கள் வேதனை தெரிவித்தனர்.

