/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இறைச்சி கடைக்காரர்களுக்கு அவகாசம் தந்த பேரூராட்சி
/
இறைச்சி கடைக்காரர்களுக்கு அவகாசம் தந்த பேரூராட்சி
ADDED : ஜூலை 12, 2025 01:12 AM
அந்தியூர்,:அந்தியூர் தவிட்டுப்பாளையம் பாலத்தை ஒட்டி சூளைமேடு அருகே, பேரூராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன் இவ்விடத்தை குத்தகைக்கு எடுத்து, தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த எட்டு பேர் ஆட்டிறைச்சி கடை நடத்தினர். குத்தகை காலம் கடந்த மார்ச், 31ம் தேதியோடு முடிவடைந்தது. இதனால் கடைகளை காலி செய்ய பேரூராட்சி நோட்டீஸ் வழங்கியது. பல்வேறு காரணங்களை கூறி அகற்ற மறுத்து வந்தனர்.
மேலும், அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட ஆட்டிறைச்சி கடைகளையும் ஏலம் எடுத்து, அங்கும் செல்ல முன்வரவில்லை. இதனால் ஆட்டிறைச்சி கடைகளை, நேற்று அகற்றப்போவதாக பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவத்தை, கடை உரிமையாளர்கள் நேற்று சந்தித்தனர். வரும், 16ம் தேதி முழுமையாக கடைகளை அகற்றி, வாரச்சந்தை வளாகத்தில் கட்டப்பட்ட கடைகளுக்கு இடம் மாறிக் கொள்வதாக உறுதியளித்தனர்.
இதனால் கடைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றவில்லை. அதேசமயம் உரிமையாளர்கள் தாங்களாகவே கூரை, பக்கவாட்டு மூங்கில் தட்டிகளை பிரிக்கும் பணியை தொடங்கினர்.