/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிகிச்சைக்கு ஆட்டோவில் பயணித்த ஆடுகளை 6 கி.மீ., தொடர்ந்த நாய்
/
சிகிச்சைக்கு ஆட்டோவில் பயணித்த ஆடுகளை 6 கி.மீ., தொடர்ந்த நாய்
சிகிச்சைக்கு ஆட்டோவில் பயணித்த ஆடுகளை 6 கி.மீ., தொடர்ந்த நாய்
சிகிச்சைக்கு ஆட்டோவில் பயணித்த ஆடுகளை 6 கி.மீ., தொடர்ந்த நாய்
ADDED : பிப் 26, 2024 07:21 AM
ஈரோடு : ஈரோடு, கருங்கல்பாளையம், செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். விவசாய கூலி தொழிலாளி. பட்டி அமைத்து, 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்க்கிறார். தவிர, பப்பி என்ற நாயை மூன்று ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். ஆடுகளும், நாயும் ஒன்றாகவே வளர்ந்ததால் மிகவும் பாசப்பிணைப்புடன் உள்ளன. மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளுடன், பப்பியும் செல்வது வழக்கம்.
இந்நிலையில் சில நாட்களாக ஆடுகள் உடல் நிலை பாதித்து, சரியாக தீனி தின்ன முடியாமல் தவித்தன. இதனால் மாதேஸ்வரன், ஆடுகளை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார். பாரம் ஏற்றிச் செல்லும் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, 3 கி.மீ., துாரத்தில் உள்ள ஈரோடு கால்நடை அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றார். அப்போது நாயும் ஆடுகளுடன் ஆட்டோவில் ஏற முயன்றது. ஆனால் அதை ஏற்றாமல், ஆடுகளை மட்டும் ஏற்றிச் சென்றார்.
ஆனாலும், ஆடுகளை பிரிய மனமில்லாத நாய், ஆடுகள் கொண்டு செல்லப்பட்ட ஆட்டோவின் பின்னால், 3 கி.மீ., துாரம் ஓடியது. சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து ஆட்டோவையும் பின் தொடர்ந்து ஓடி வந்தது. இதை ஒருவர் மொபைல் போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

