/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தலுக்கு முன்பே 'இண்டியா' கூட்டணி உடையும்
/
தேர்தலுக்கு முன்பே 'இண்டியா' கூட்டணி உடையும்
ADDED : ஜன 25, 2024 12:01 PM
ஈரோடு: ''தேர்தலுக்கு முன்பே, 'இண்டியா' கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
ஈரோடு - திருநெல்வேலி இடையே, முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ரயில், செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் ஓட்டத்தை, மத்திய இணை அமைச்சர் முருகன், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
ஒன்பது ஆண்டுகளில் ரயில்வேயை, 100 சதவீதம் மின் மயமாக்கி, மோடி அரசு சாதனை படைத்துள்ளது. ரயில்வேயில் தற்போது உள்நாட்டிலேயே ரயில் பெட்டி தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டு மட்டும் ரயில்வேக்கு, 6,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்., ஆட்சியின், 2009 - 14 கால கட்டத்தில், 800 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் ஒன்பது புதிய வழிதடங்களில் ரயில் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன் இணை ரயில், செங்கோட்டையில் இருந்து இன்று காலை இயக்கப்படுகிறது.
நிருபர்களிடம் மத்திய இணை அமைச்சர் முருகன் கூறியதாவது:வந்தே பாரத் ரயில் பெட்டிகள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த, 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு, 11 லட்சம் கோடி ரூபாயை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். 'இண்டியா' கூட்டணி தேர்தலுக்கு முன்பே, எந்த நேரத்திலும் உடையலாம். மேற்கு வங்கம், கேரளாவில் இந்த கூட்டணி ஒன்றிணைந்து நிற்க இயலாது.
ராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி, குளிர் காய முடியுமா என்று, தி.மு.க.,தான் எதிர்நோக்கி காத்திருந்தது. தி.மு.க., இளைஞரணி மாநாடு நமத்து போன மிக்சரான மாநாடு. ராகுலின் யாத்திரை கண் துடைப்பு. மக்களுக்கு தேவையில்லாத யாத்திரையை நிறுத்தி, மக்களுக்கு பயனுள்ள காரியத்தை, ராகுல் செய்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு முருகன் கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பா.ஜ., எம்.எல்.ஏ., சரஸ்வதி, சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.