/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முருகப்பெருமான் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம் விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்; பக்தர்கள் பரவசம்
/
முருகப்பெருமான் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம் விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்; பக்தர்கள் பரவசம்
முருகப்பெருமான் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம் விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்; பக்தர்கள் பரவசம்
முருகப்பெருமான் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம் விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்; பக்தர்கள் பரவசம்
ADDED : அக் 28, 2025 01:45 AM
ஈரோடு மாவட்டத்தில் முருகப்பெருமான் கோவில்களில், கந்த சஷ்டி விழாவின் உச்ச நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க, சூர வதம் நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, சென்னிமலை மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடப்பாண்டு கந்த சஷ்டி விழா கடந்த, 22ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து அன்று காலை கைலாசநாதர் கோவிலில் இருந்து தம்பதி சமேத சுப்பிரமணியர் உற்சவமூர்த்தி மலை கோவிலை அடைந்தது. அன்று முதல் நேற்று மதியம் வரை தினமும், யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் இந்நாட்களில் திரளாக கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதற்காக நேற்று மதியம், 2:00 மணிக்கு மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்திவேல் வாங்கும் வைபோகம் நடந்தது.
தலைமை குருக்கள் ராமநாதசிவச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி வேலினை ஒப்படைத்தார். அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு தொடங்கி படி வழியாக தம்பதி சமேத உற்சவர் முருகப்பெருமான் மலை அடிவாரத்தில் எழுந்தருளினார். இரவு, 9:00 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை, சிறப்பு மேளதாளத்துடன் சூர வதம் எனப்படும் சூரசம்ஹாரம் தொடங்கியது. சென்னிமலையின் நான்கு ராஜவீதிகளில் நடந்த சூரசம்ஹாரத்தை காண, ஆயிரக்காணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மேற்கு ராஜவீதியில் ஜெகமகாசூரனை, வடக்கு ராஜவீதியில் சிங்கமுகசூரனை, கிழக்கு ராஜவீதியில் வானுகோபனை, தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி, அரோகரா கோஷம் முழங்க பக்தி பரவசமாக நடந்தேறியது. இதை தொடர்ந்து முருகப்பெருமான் கைலாசநாதர் கோவிலுக்கு சென்றார். இன்று காலை, 10:00 மணிக்கு முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்யும் நிகழ்வு நடக்கிறது.
திண்டலில்...
ஈரோடு அருகே திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில், மாலை, 6:௦௦ மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. சப்பரத்தில் மலை அடிவாரத்துக்கு வந்த உற்சவர் வேலாயுதசுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏற்கெனவே சப்பரத்தில் நின்று கொண்டிருந்த சூரபத்மனிடம், முருகனின் துாதுவரான வீரபாகு தேவர் பேச்சுவார்த்தை நடத்துவது செய்து காண்பிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் சூரசம்ஹாரம் எனப்படும் போர் துவங்கி, சூரபத்மன் மற்றும் சகோதரர்களை வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரோ என விண்ணதிர கோஷமிட்டனர்.
கோபியில்...
கோபி அருகே பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார திருக்கல்யாண உற்சவ விழா கடந்த, 22ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் யாகசாலை பூஜை, சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடந்தது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று காலை நடந்தது. இதற்காக வீரபாகுவுடன் முருகப்பெருமான், மலைக்கோவிலில் இருந்து திரளான பக்தர்களுடன் அடிவாரத்துக்கு எழுந்தருளினார். நான்கு இடங்களில் நான்கு சூரனை வதம் செய்தார். அதையடுத்து பன்னீர் அபிஷேகம் மற்றும் சண்முகர் அர்ச்சனை நடந்தது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலிலில், கிரிவீதியில் சூரசம்ஹார வழக்கமான உற்சாகத்துடந் நடந்தது.
புன்செய்புளியம்பட்டியில்...
புன்செய்புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி சுப்பிரமணியர் கோவிலில், சூரசம்ஹார நேற்று மாலை துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட குதிரை மற்றும் சப்பர வாகனங்களில் எழுந்தருளிய முருகப்பெருமான், சூரபத்மனின் மூன்று அவதாரங்களை வதம் செய்தார். நிகழ்வில் ஏராளமான பெண் பக்தர்கள் வேல் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் பெருந்துறை சோழீஸ்வரர் கோவில், ஆப்பக்கூடல் கணேச பால தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவில், பவானி கூடுதுறை ஆறுமுகன் சுவாமி கோவில், சத்தி அருகே தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவில், வடவள்ளி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நிருபர்கள் குழு

